
கும்மிடிப்பூண்டியைத் தாண்டி, தேர்தலில் போட்டியிடாத தி.மு.க தேசிய அரசியலில் ஈடுபடுவதாக கூறுவது வேடிக்கையானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதன்பின்னர் செய்தியாளர்களை ச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``இந்தியாவில் நடைபெற்ற 3 மாநில சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. பா.ஜ. கட்சியின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிங்களில், 1947-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த பிரதமர்கள் சென்று வந்ததைவிட, தற்போதைய பிரதமர் மோடி (52 முறை) அதிகமாக சென்று வந்துள்ளார். அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு பகுதி மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது அல்லது பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை, மக்கள் அளித்துள்ள தீர்ப்பை, பா.ஜ.க தலை வணங்கி ஏற்கிறது. இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், கடந்த 2 ஆண்டு கால ஆட்சிக்கான மதிப்பீடு என இதை கருத முடியாது. இத்தேர்தலை பொறுத்தவரை பணம் எந்தளவு விளையாடியது என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது குறித்து ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு, பல தகவல்களை தெரிவித்திருந்தோம்.
திருமாவளவன் திமுக கூட்டணியிலிருந்து வெளியே வர சாக்குபோக்கு தேடுகிறார். கூட்டணியை விட்டு வெளியே வருவதாக இருந்தால் தைரியமாக திருமாவளவன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவன், தடா பெரியசாமியிடம் கருத்தியல் ரீதியாக விவாதிக்கட்டும். அவர் திருமாவளவன் குறித்து விமர்சித்ததால் அவர் கார் அடித்து உடைக்கப்பட்டது. திருமாவளவன் ஜாதிக்கட்சியின் தலைவர். அவர் குறுகிய வட்டத்திற்குள் உள்ளார். ஜாதி அமைப்பு வேறு, கட்சி வேறு.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இந்த ஆட்சியில் எங்காவது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதா? காஷ்மீரில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 88 சதவீத பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைத்த அளவுக்கு வேறு ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளதா?
எதிர்வரும் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பா.ஜ.க ஆட்சிக்கான மதிப்பீடு. அப்போது, பா.ஜ.க ஆட்சியின் சாதனைகள், பிரதமர் மோடி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை, மக்களிடம் எடுத்துக் கூற தயாராக உள்ளோம். லோக்சபா தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்கு மாறாக அமையும்.
சென்னையில் நடந்த தனது பிறந்தநாள் விழா கூட்டத்தில், தான் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கும்மிடிப்பூண்டியைத் தாண்டி, தேர்தலில் போட்டியிடாத தி.மு.க., தேசிய அரசியலில் ஈடுபடுவதாக கூறுவது வேடிக்கையானது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய பக்கத்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் பங்கேற்காத தி.மு.க.வை, தேசிய அரசியலில் இருப்பதாக கூறுகிறார்.
மம்தா பானர்ஜி கூட்டத்திலும், டெல்லியிலும் பேசினால் அது தேசிய அரசியலா? இந்த விழாவிற்கு சந்திரசேகரராவ், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் வந்திருந்தால், முக்கியத்துவம் கிடைத்திருக்கும். இவர்கள் எல்லாம் தேசிய அரசியல் செய்து வருகின்றனர்.
ஆனால் ஜம்மு–காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, அவரது மாநிலத்தில் அரசியல் செல்வாக்கை இழந்தவர். ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் ஸ்டாலினின் பேரன் வயதை ஒத்தவர்; தற்போதுதான் அரசியலுக்கு வந்தவர். அவர், வந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறுகிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராய்ப்பூர் சென்றபோது, அவரது கட்சியினரே உரிய மரியாதை அளிக்கவில்லை.
முதல்வர் பிறந்த நாள் விழாவிற்கு, ராகுல் வந்திருக்கலாமே. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். விலை போகாத 4 கத்தரிக்காயை, கொண்டு வந்து ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் ஏற்றி முதலமைச்சரை மார்க்கெட் செய்கிறார்கள். அந்த கத்தரிக்காயே விலை போகவில்லை, அதுகூட சேர்ந்து புடலங்காய் எப்படி விலை போகும்?
தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்; அதனால் எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. பிரதமர் மோடியின் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுடன், வரும் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தமிழக பா.ஜ.க. கூட்டணி அமையும்" என்று தெரிவித்தார்.