
பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவரும், திருச்சி சிவா எம்.பியின் மகனுமான சூர்யா, பாஜக பெண் நிர்வாகி ஒருவரிடம் ஆபாசமாக பேசியதுடன் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ஆடியோ வெளியான விவகாரம் குறித்து விசாரிக்க கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பாஜக தலைமை உத்தரவிட்டிருக்கிறது.
இதுகுறித்து பாஜக தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ தமிழக பாஜக மாநில சிறுபான்மை அணி தலைவர் டெய்ஸி சரணுக்கும், ஓபிசி பிரிவின் மாநில துணைத்தலைவர் சூர்யா சிவாவிற்கும இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து ஏழு நாட்களுக்குள் கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான கனகசபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவர் சூர்யா சிவா கட்சியின் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க சூர்யா சிவாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கோயிலில் இருப்பதாகவும், பிறகு அவரை அழைக்கச் சொல்வதாகவும் அலைபேசியை எடுத்தவர் பதில் அளித்தார்.