அரசு வழங்கும் நிவாரணம் இரண்டு குவாட்டருக்குக் கூட பத்தாது: ஆமோதிக்கும் அண்ணாமலை

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

அதீத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் மாநில  தலைவர் அண்ணாமலையும்  அடுத்தடுத்து வந்திருந்தனர்.

காலையில் எடப்பாடி பழனிசாமி வந்து சென்றதைத் தொடர்ந்து அதே வழியாக மாலையில்  பாஜக தலைவர் அண்ணாமலை வந்திருந்தார்.  சிதம்பரம், கொள்ளிடம், நல்லூர்,  சீர்காழி, பும்புகார்  உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியவர்,  பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதேபோல விவசாய நிலங்களையும் பார்வையிட்டு விவசாயிகளிடம்  பாதிப்பு விபரங்களையும் கேட்டறிந்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு,  மாநில அரசுக்கு மாநில பேரிடர் நிதியை அளித்து வருகிறது.  இந்த ஆண்டு 856 கோடி ரூபாயைத் தமிழகத்திற்கு  மத்திய அரசு ஓதுக்கிடு செய்திருக்கிறது. அதில் முதல் தவணையாக 428 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கி இருக்கிறது. தற்போது மாநில அரசு அறிவித்திருக்கிறது எல்லாம் அந்த  பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தான் வழங்கப்படுகிறது.

ஆனால், மாநில அரசு அறிவித்திருக்கிற ஆயிரம் ரூபாய் என்பது போதாது. இரண்டு குவாட்டருக்குக் கூட பத்தாது என்று ஒருவர் சொன்னார். அந்த நிலைமை தான் நீடிக்கிறது.  வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து சில பகுதிகளில் நான்கு நாள் வரை இருந்திருக்கிறது.  அப்படி இருக்கும்போது இவர்கள் அறிவித்திருக்கிற ஆயிரம் ரூபாய் போதாது. எனவே, உடனடியாக 5000 ரூபாயை  மாநில அரசு வழங்க வேண்டும்.

அதேபோல பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.  ஸ்டாலின்  எதிர்க்கட்சியாக இருந்தபோது இதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு  முப்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதையே தான் நாங்கள் இப்போது கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல பயிர் காப்பீடு தங்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக கருப்பு முருகானந்தம் தலைமையில் ஒரு குழு விரைவில் டெல்லி  சென்று மத்திய வேளாண் துறை அமைச்சரையும்,  நிதி அமைச்சரையும்  சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம்.  மயிலாடுதுறை மாவட்டத்தை முழுமையாக பாதித்த மாவட்டமாக அறிவித்து முழு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்திடம் வலியுறுத்த வேண்டுமென்று அவர்களிடம் கோரிக்கை வைக்க போகிறோம்.

பயிர் காப்பீட்டுக்கான அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் மேலும் 10 நாட்களுக்கு அதை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.  அதை மத்திய அரசிடம் மேலும் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறோம்.

இது பாதிப்புக்கு உள்ளாகும்  மாவட்டம். அதனால்  இன்னும் முன்னெச்சரிக்கையாக  அரசு இருந்திருக்க வேண்டும்.  அப்போதுதான் தண்ணீர் வீட்டுக்குள் வந்திருக்காது. வடிகால் சரியாக தூர்வாராததால் தான்  தண்ணீர்  கடலுக்கு போய் சேரவில்லை.  வீட்டுக்குள் வந்து விட்டது. மக்கள் யாரும்  மகிழ்ச்சியாக இல்லை.  பலருக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு எப்படி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

தமிழக அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது கோயம்புத்தூரில் நடந்தது கார் சிலிண்டர் வெடிப்பு என்று சொன்ன அரசாங்கம், சிதம்பரத்தில் பஸ் வெடித்ததை  தீப்பற்றியது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் நம்பத் தயாராக இல்லை.  இதனால் மக்களுக்கு  அரசின் மீது நம்பிக்கை போய்விட்டது.  விரைவில்  தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் அமரும். நாங்கள் மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in