பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட பரபரப்பு அடங்குவதற்குள், பாஜகவின் மருத்துவர் அணி மாநில பொறுப்பாளர் டாக்டர் விஜயபாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. திமுகவை விமர்சிப்பதற்கு இணையாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவையும் அண்ணாமலை சீண்டி வந்தார். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை அவர் நேரடியாக தாக்கிப் பேசியதால் இனியும் பாஜகவுடன் கூட்டணியை தொடர முடியாது என அதிமுக முடிவெடுத்தது.
அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக உடனான கூட்டணி முறிவை உறுதிப்படுத்தியதுடன் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். அதிமுக தலைவர்களும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையையும், பாஜகவையும் விமர்சித்து பேசி வருகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணியை முறித்த வேகத்தில், பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஐடி விங் 4 மண்டலங்களாக செயல்பட்டு வந்த நிலையில், ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார். மருத்துவர் அணி உள்பட பல்வேறு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமனம் செய்து அதிரடி காட்டினார். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாஜகவின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பாஜகவின் மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் விஜயபாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் அதிமுக மருத்துவர் அணியின் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்காக நன்றி தெரிவிப்பற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, பாஜகவில் மருத்துவர் அணி மாநில தலைவராக இருந்த விஜயபாண்டியனையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது விஜயபாண்டியன், அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே அண்ணமலையின் மீதான அதிருப்தியால் பாஜக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், அடுத்த கட்டமாக தற்போது பாஜக உடனான கூட்டணியை முறித்துள்ள அதிமுக, பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளை இழுப்பதில் வேகம் காட்டி வருகிறதாம். இனி பல்வேறு நிர்வாகிகள் பாஜகவிலிருந்து வருவார்கள் என அடித்து சொல்கிறதாம் அதிமுக தரப்பு!
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!