
செக் மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகிக்கு தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்து லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்துள்ளது.
பாஜகவில் பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளராக இருப்பவர் வி.எஸ்.ஆர் பிரபு. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் இருமுறை கவுன்சிலராகவும் இருந்தவர். இவர் தனது நண்பரான பரமசிவம் என்பவரிடம் தன் தொழில் அபிவிருத்திக்காக கடன் பெற்று இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு 5 லட்ச ரூபாய் கடனாக வாங்கிய வி.எஸ்.ஆர் பிரபு அதற்காக காசோலை ஒன்றை பரமசிவத்திற்கு வழங்கினார்.
ஆனால் அந்த செக்கானது வி.எஸ்.ஆர் பிரபுவின் கணக்கில் பணம் இல்லாததால் ரிட்டன் ஆகிவிட்டது. இதுதொடர்பாக பரமசிவம் பலமுறைக் கேட்டும், வி.எஸ்.ஆர் பிரபு தொகையை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் பரமசிவம் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கானது, தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் வி.எஸ்.ஆர் பிரபுக்கு இரு ஆண்டு சிறைத் தண்டனையும், பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில நிர்வாகிக்கு செக் மோசடி வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட விவகாரம், தூத்துக்குடி பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.