ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: எந்த முடிவும் எடுக்காமல் முடிந்தது பாஜக செயற்குழு கூட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: எந்த முடிவும் எடுக்காமல் முடிந்தது பாஜக செயற்குழு கூட்டம்

``தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று  பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

தமிழக பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம்  கடலூரில் மாநில  தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று  நடைபெற்றது.  உலக பிரச்சினைகளை  தீர்க்கும்  நாடாக இந்தியாவை உருவாக்கி பெருமை சேர்த்து, காசி தமிழ்சங்கமம் நடத்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு  பாராட்டு  தெரிவிக்கப்பட்டது.  அதன் பின்னர்  முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு தீர்மானங்களே  பிரதானமாக விவாதிக்கப்பட்டன.  

தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சாசனவரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக  நடந்த அராஜகத்தைக் கண்டித்தும், ஆளுநர் உரையின்போது ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் நடவடிக்கைகளை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தமிழ்நாடு என்பதை ிட தமிழகம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்ற தன் கருத்தை ஆளுநர் ஒரு விழாவில் பேசியதை திசை திருப்பி, மொழி அரசியலை முன்னெடுத்து ஆளுநரை அவதூறு செய்ததை பாஜக  செயற்குழு  கண்டித்தது.

தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஆளுநரை அவமானப்படுத்தி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக பேச்சாளரின் மூலம் ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்ததோடு, ஆளுநருக்கு கொலைமிரட்டல் விடுத்ததையும், சட்டப்பேரவையில் கொலை நடந்தாலும் வழக்கு இல்லை என்று கூறி, சட்டப்பேரவையின் கண்ணியத்தை குலைத்து, ஆளுநரை தரம் தாழ்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதியை இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தமிழக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், சேது கால்வாய்த்திட்டம் ராமர் பாலம் பாதிக்கப்படாமல் அமைக்கப் படவேண்டும் என்றும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக விவசாயிகளையும் நெசவாளர்களையும் வஞ்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது எனவும், புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராம பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு, அவற்றை ஒன்றியம் பகுதி வாரியாக விளக்கவும், அதை வலியுறுத்தி தமிழக பாஜக தலைவரின் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பது  குறித்தும் தமிழக பாரதிய ஜனதா செயற்குழு  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நடத்தப்பட்ட  செயற்குழு கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக  போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அது குறித்த எந்த முடிவும்  எடுக்கப்படாதது  கட்சி நிர்வாகிகள் இடையே  ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in