`குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தால்தான் திமுகவில் இருக்க முடியும்'- சொல்கிறார் பாஜக மாநில செயலாளர்

பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.
பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.

``திமுக எதிர்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக, வெல்கம் பேக் மோடி என சொல்ல வேண்டிய நிலையை மக்கள் தண்டனையாக கொடுத்துள்ளனர்'' என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் என்று கூறியுள்ளார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீனிவாசன், "சென்னையில் பாஜகவின் தாழ்த்தப்பட்ட சமுதாய பிரிவு தலைவர் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்று உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். குறி வைத்து தாக்குதல் நடத்தி உள்ளது போல தெரிகிறது. தமிழகத்திற்கு, பிரதமர் வருகையையொட்டி நடைபெற்றுள்ள இச்சம்பவம் ஒரு அச்சுறுத்தலாக நடந்துள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்தவர் யாராக இருப்பினும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்றது, தமிழகத்தில் நாசக்கார சக்திகளுக்கு உற்சாகம் தருவது போல நடந்து விடக்கூடாது.

சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி பாஜக மட்டும் தான். பிறப்பின் அடிப்படையில் தலைவரை நியமிக்கும் கட்சி பாஜக அல்ல. திமுகவில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தங்கள் தந்தையோடும், மகன் படங்களோடும், அமைச்சர்கள் கூட தங்கள் மகன்களின் படங்களோடும் தான் போஸ்டர் ஒட்டுகின்றனர். தமிழ்நாடு முழுக்க முதல்வர் ஸ்டாலினோடு உதயநிதி ஸ்டாலினின் படத்தை போடுகின்றனர். குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தால் தான் திமுகவில் இருக்க முடியும். பாஜகவில் உழைப்பவர்களுக்கு, புதியவர்களுக்கு, இளைஞர்களும் இடம் உள்ளது. அவர்களுக்கு பதவி, பொறுப்பு உள்ளது. 33% இடஒதுக்கீடு கொடுக்கிற கட்சி பாஜக.

முதன்முதலில் தலித் ஒருவரை நிர்வாகியாக்கியதை மார்க்சிஸ்ட் கட்சியினர் சாதனையாக கூறுகின்றனர். பாஜகவில் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று அவர்களுக்கு அசாதாரண செய்தியாக உள்ளது. உண்மையான சமூகநீதி சுயமரியாதை உள்ள கட்சி பாஜக. திமுகவினர் முதுகையும் இடுப்பையும் இரண்டடி வளைத்து தான் திமுக தலைவர்களை சந்திக்க முடியும். திமுக எதிர்கட்சியாக இருந்த போது, 'கோ பேக் மோடி' என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக 'வெல்கம் பேக் மோடி' என சொல்ல வேண்டிய நிலையை மக்கள் தண்டனையாக கொடுத்துள்ளனர்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in