'பாஜக குப்பையைப் பரப்புகிறது... தூய்மைக்கு வாக்களியுங்கள்' - அர்விந்த் கேஜ்ரிவாலின் அடுத்த அஸ்திரம்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

பாஜக டெல்லி முழுவதும் குப்பைகளை பரப்பியுள்ளது. இந்தமுறை டெல்லி மக்கள் தூய்மைக்காக வாக்களிப்பார்கள் என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இரண்டு புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். அதில் ஒன்றில் தெருவில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. மற்றொன்று குப்பை மலைபோல குவிந்துள்ளது. எனவே தேசிய தலைநகரில் வசிப்பவர்கள் 'தூய்மைக்கு வாக்களியுங்கள்' என்று அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 4 ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ கடந்த 15 ஆண்டுகளில், பாஜக டெல்லி முழுவதும் குப்பைகளை பரப்பியுள்ளது. குப்பை மலைகளை உருவாக்கியுள்ளது. இந்த முறை, டிசம்பர் 4 ம் தேதி, டெல்லி மக்கள் தூய்மைக்காக வாக்களிப்பார்கள்..." என்று கூறினார். மேலும், “காஜிபூர் குப்பை மேடு பாஜகவின் மோசமான செயல்கள் மற்றும் குடிமை அமைப்புகளின் ஊழல்களின் மலையாகும். குப்பை பிரச்சினையில்தான் இந்த தேர்தல் நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.

டெல்லியில் குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றும் விவகாரம் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ஒரு முக்கிய ஃப்ளாஷ் புள்ளியாக உள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெல்லி மாநகராட்சி தேர்தலில் இது முக்கிய பிரச்சினையாக இருக்கும்.

கடந்த மாதம் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் வடக்கு டெல்லியின் பல்ஸ்வா குப்பைக் கிடங்கிற்கு அருகே பாஜகவின் 'குப்பை முறைகேடு' என்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த வாரம் கேஜ்ரிவால் காஜிபூரில் உள்ள குப்பை கிடங்கிற்குச் சென்றார், அவரும் பாஜக மீது குற்றம் சாட்டினார். அப்போது, "இந்த குப்பை மலைகளால் பல கி.மீ துாரங்களில் வசிக்கும் மக்கள் அவதிப்பட வேண்டியுள்ளது. நகரின் மூலை முடுக்கெல்லாம் இதே நிலைதான். கடந்த 15 ஆண்டுகளில் இதுவே பா.ஜ.கவின் சாதனை” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாஜக, கேஜ்ரிவால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் இந்த தேர்தல், ஏற்கெனவே ஏப்ரலில் திட்டமிடப்பட்டது. ஆனால் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனைக் கொண்ட மூன்று குடிமை அமைப்புகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு முன்மொழிந்தது, இது கடுமையான எதிர்ப்பையும் தூண்டியது. மேலும் டெல்லி மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை 272ல் இருந்து 250 ஆகக் குறைக்கும் திட்டமும் மற்றொரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸின் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை டிசம்பர் 14ம் தேதி நீதிமன்றம் விசாரிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in