திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி; 2ம் இடத்தில் திப்ரா மோதா கட்சி: சிபிஎம்க்கு பின்னடைவு - முழுமையான ரிசல்ட்

பாஜக முதலிடம்
பாஜக முதலிடம்திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி; 2ம் இடத்தில் திப்ரா மோதா கட்சி: சிபிஎம்க்கு பின்னடைவு - முழுமையான ரிசல்ட்

திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் பெரும்பான்மையைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதே நேரத்தில் சிபிஎம் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

திரிபுராவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் இன்று காலையில் பாஜக சுமார் 40 இடங்களில் முன்னிலை வகித்தது, இதன் காரணமாக பாஜகவினர் உற்சாகமாக இருந்தனர். ஆனால் அதன்பின்னர் பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை தொடர்ந்து சரிந்தது. ஆனாலும் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக 32 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐஎப்பிடி ஒரு இடத்திலும் வென்றுள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மைக்குத் தேவையான 31 என்ற எண்ணிக்கைக்கு அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளதால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. சிபிஎம் 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

ஆனால், திரிபுராவில் இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட திப்ரா மோதா கட்சி தற்போது 13 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து முக்கிய எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. திரிபுரா அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோக் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மா இக்கட்சியின் தலைவராக உள்ளார். கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்து திப்ரா மோதா கட்சி கவனிக்கத்தக்க கட்சியாக மாறியுள்ளது. இத்தேர்தலில் பாஜக 39 சதவீத வாக்குகளையும், சிபிஎம் - காங்கிரஸ் கூட்டணி 33 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in