தனித்து நின்று மணிப்பூரை வென்ற பாஜக!

தனித்து நின்று மணிப்பூரை வென்ற பாஜக!
என்.பீரேன் சிங்

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில், நான்கில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது மணிப்பூர். 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது.

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியின் ஆதரவும் தேவையில்லை எனத் தனித்துக் களம் கண்டது பாஜக. மேகாலயா முதல்வர் கோன்ராடு சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி), மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்தது. மேகாலயாவில் அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் பாஜக இருக்கிறது. எனினும், மணிப்பூர் தேர்தலில் கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேறிவிட்டது.

நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன. மேகாலயா ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியும் இந்தத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டது.

இந்தச் சூழலில், பாஜகவுக்கு இதுவரை 29 இடங்கள் கிடைத்திருக்கின்றன. 3 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க 31 இடங்கள் போதுமானவை என்பதால், எந்தக் கட்சியின் தயவும் இன்றி பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் என்.பீரேன் சிங் மீண்டும் முதல்வராகிறார்.

கால்பந்து வீரர், பத்திரிகையாளர், அரசியல் தலைவர்!

2002-ல் ஜனநாயகப் புரட்சிகர மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், 2007 மற்றும் 2012 தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்தவர் அந்தத் தேர்தலிலும் வென்று முதல்வராகிவிட்டார். இதன் மூலம் மணிப்பூரின் முதல் பாஜக முதல்வார் எனும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பீரேன் சிங், இளம் வயதில் கால்பந்து விளையாட்டு வீரராக இருந்தவர். தனது 18-வது வயதில் எல்லைக் காவல் படையின் (பிஎஸ்எஃப்) சார்பில் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அணியிலும் இடம்பெற்றிருந்தார். 1992-ல் நகரோல்கி தவுடாங் எனும் நாளிதழைத் தொடங்கினார். அதற்குப் போதிய பணம் இல்லாததால், தங்கள் பூர்விக நிலத்தை விற்று அவரது தந்தை அவருக்கு உதவினார். 2001-ல் வரை அந்த இதழின் ஆசிரியராக பீரேன் சிங் இருந்தார்.

முக்கியப் பிரச்சினைகள், வாக்குறுதிகள்

ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்திக் களம் கண்டது பாஜக. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போராட்டங்கள், கடையடைப்புகள், போலி என்கவுன்டர்கள், ஸ்திரத்தன்மையின்மை, கிளர்ச்சி சம்பவங்கள், ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகள் நிலவியதாகவும், பாஜக ஆட்சியில் அமைதி, ஸ்திரத்தன்மை, சுமுகமான சூழல் என மணிப்பூர் மாறியிருப்பதாகவும் பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். அதேவேளையில் அரிசி, காஸ் சிலிண்டர் என அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் முக்கியப் பிரச்சினையாக இருந்தது.

இந்தத் தேர்தலில் மிக முக்கியப் பிரச்சினையாக இருந்தது ஆஃப்ஸ்பா சட்டம். காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆஃப்ஸ்பா சட்டம் நீக்கப்பட்டது. ஆனால், பாஜக இந்தச் சட்டம் குறித்து வாக்குறுதி அளிக்கவே இல்லை. காங்கிரஸ் கட்சியோ, 2022 தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால், ஒட்டுமொத்த மாநிலத்திலிருந்தும் இந்தச் சட்டத்தை நீக்குவது குறித்து, முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவுசெய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

அதேவேளையில், மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ் தலைமை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பெயரளவுக்குத்தான் பிரச்சாரம் செய்தது. மாறாக, பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என மத்திய அரசின் முக்கியத் தலைவர்கள் மணிப்பூரில் முகாமிட்டனர். பாஜக ஆட்சியில் தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், விளையாட்டு, தொழில் துறை போன்ற துறைகளில் மணிப்பூர் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் நம்பிக்கையூட்டும் வகையில் பேசினர். இரண்டாவது முறையாக பாஜகவை வெற்றிபெற வைத்தால் வளர்ச்சிப் பணிகள் தொடரும் என்றும் உறுதியளித்தனர்.

அதற்கான பலனையும் அறுவடை செய்துவிட்டது பாஜக!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in