
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி தேங்காயுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதால் பாஜகவினர் கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அங்கு இருந்த தேங்காய்களை பொதுமக்கள் அள்ளிச்சென்ற சுவாரஸ்ய சம்பவமும் நிகழ்ந்தது.
தென்காசி மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை சலுகை விலையில் வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் தடையை மீறி தேங்காய், இளநீர், தென்னங்கன்றுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட, அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திற்கு கொண்டுவந்த இளநீர், தேங்காய்களை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு, வீட்டிற்குக் கொண்டுசெல்ல எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.