
புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோசனா தாஸ் பதவி விலக்கோரி பாஜகவினர் கொசுவலையைப் போர்த்தி நூதனப்போாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் கந்திகிரி பகுதியைச் சேர்ந்த 7 வயது குழந்தை டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதேபோல், டெங்குவால் பாதிக்கப்பட்ட 62 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாத பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த புவனேஸ்வர் மேயர் சுலோசனா தாஸ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கொசுவலையைப் போர்த்தி பாஜகவினர், மேயரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டம் குறித்து பாஜக புவனேஸ்வர் மாவட்ட தலைவர் பாபு சிங் கூறுகையில், " புவனேஸ்வர் மாநகராட்சி பகுதியில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பதாகக் கூறினார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதியை மேயர் நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக டெங்கு பரவி வருகிறது" என்றார்.
ஒடிசா பொது சுகாதாரத்துறை இயக்குநர் நிரஞ்சன் மிஸ்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்," கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது" என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு இந்த நேரத்தில், சுமார் 10 ஆயிரம் டெங்கு சோதனைகள் தான் செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு, இதுவரை 18 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.