திருச்சி சிவாவின் மகன் கைதுக்கு அன்பில் மகேஷ் காரணமா?- அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சிவாவின் மகனும் பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளருமான சூர்யா சிவாவை தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் திருச்சி கன்டோன்மென்ட் போலீஸார் கைது செய்தனர். என்னுடைய பேருந்தை கடத்திச்சென்று தன் பொறுப்பில் வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சூர்யா மீது அந்த பேருந்தின் உரிமையாளர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சூர்யா கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த கைது நடவடிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான் காரணம் என சூர்யா சிவா ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். அதனால் அவருக்கு ஆதரவாக தமிழக பாஜகவினர் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பொய்வழக்கு போடும் காவல்துறையை கண்டித்தும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதில் கலந்து கொண்ட மாநில ஓபிசி அணித்தலைவர் சாய் சுரேஷ், திருச்சி பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உட்பட பாஜகவினர் 271 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிப்பார் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in