தடுப்பு வேலிகள் உடைப்பு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பாஜகவினரால் பதற்றம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழையும் பாஜகவினர்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழையும் பாஜகவினர்

பழனி அருகே தமிழக உணவுத்துறை அமைச்சரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ளது புஷ்பத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பாஜகவை சேர்ந்த செல்வராணி மகுடீஸ்வரன் உள்ளார். இந்நிலையில், புஷ்பத்தூர் ஊராட்சி தலைவரை செயல்பட முடியாத வகையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் காரணமின்றி ஊராட்சி மன்றத் தலைவருக்கான காசோலை அதிகாரத்தை முடக்கி வைத்து தமிழக உணவுத்துறை அதிகாரிகள் தடுப்பதாக குற்றம்சாட்டி பாஜக சார்பில் இன்று மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல்துறை மீறி கேட்டிற்குள் ஏறி குதிக்கும் பாஜகவினர்
காவல்துறை மீறி கேட்டிற்குள் ஏறி குதிக்கும் பாஜகவினர்

பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் வராததால் கோபமுற்ற பாஜகவினர் ஆயிரக்கணக்கானோர் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் நுழைய முடியாதபடி காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நுழைவாயில் கேட்டை உடைத்தும், சுவற்றில் ஏறி குதித்தும் அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அத்துமீறி நுழைந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in