மம்தாவின் ஆட்சிக்கு எதிராக பாஜக போராட்டம்: போர்க்களமானது கொல்கத்தா!

மம்தாவின் ஆட்சிக்கு எதிராக பாஜக போராட்டம்: போர்க்களமானது கொல்கத்தா!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள மாநில தலைமைச் செயலகமான நபன்னாவுக்கு பாஜக இன்று பேரணியாகச் சென்றது. இப்பேரணியில் வன்முறை வெடித்ததால் ​​எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட பல பாஜக தலைவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி மற்றும் ராகுல் சின்ஹா ​​உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலகம் அருகே இருக்கும் இரண்டாவது ஹூக்ளி பாலத்தில் சென்றபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, வேனில் ஏற்றிச் சென்றனர்.

ஹவுரா பாலம் அருகே போராட்டக்காரர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதால் அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். இந்த வன்முறையில் போராட்டக்காரர்களால் போலீஸ் வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மோதலை தொடர்ந்து பல பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ராணிகஞ்சிலும் பாஜக தொண்டர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். மத்திய கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே போராட்டக்காரர்களால் போலீஸ் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. அந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்கம் முழுவதிலும் இருந்து ஏராளமான பாஜக ஆதரவாளர்கள் இன்று காலை கொல்கத்தா மற்றும் ஹவுராவிற்கு பேரணியில் கலந்துகொள்ள வந்தனர். இந்த பேரணிக்காக வடக்கு வங்கத்திலிருந்து மூன்று மற்றும் தெற்கு வங்கத்தில் இருந்து நான்கு ரயில்களை வாடகைக்கு எடுத்து தனது கட்சி உறுப்பினர்களை பாஜக கொல்கத்தாவுக்கு அழைத்து வந்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் பேசிய சுவேந்து அதிகாரி, “முதலமைச்சர் மம்தாவுக்கு மக்கள் ஆதரவு இல்லை, அதனால் அவர் வடகொரியாவைப் போல சர்வாதிகாரத்தை வங்காளத்திலும் அமல்படுத்துகிறார்" என்றார்.

டிஎம்சிக்கு எதிரான பேரணியை சந்த்ராகாச்சி பகுதியில் இருந்து அதிகாரி வழிநடத்தினார். அதே நேரத்தில் பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் வடக்கு கொல்கத்தாவில் இருந்து போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு இடையே கொல்கத்தா காவல்துறையினரால் முன்னாள் எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா தாக்கப்பட்டு காயம் அடைந்ததாக பாஜக தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in