வாட்ச் வாங்கிய ரசீது பாதயாத்திரை நடத்தும்போது வெளியிடுவேன்: அண்ணாமலை பதில்

வாட்ச் வாங்கிய ரசீது  பாதயாத்திரை நடத்தும்போது  வெளியிடுவேன்: அண்ணாமலை பதில்

அண்ணாமலையின்  வாட்ச் விலை என்ன என்பதற்கான ரசீதை அவர் வெளியிடுவாரா என்று திமுக  அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அது குறித்த விவரங்களை பாதயாத்திரையின் போது வெளியிடப் போவதாக அண்ணாமலை பதிலளித்துள்ளார்

அண்ணாமலை கட்டியிருக்கும்  ரஃபேல் வாட்ச் பற்றிய சர்ச்சை தமிழக அரசியலில்  பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.  அதனையடுத்து ரஃபேல் விமானம் தயாரிக்கும் பாகங்களால் தயாரிக்கப்பட்ட  500 கடிகாரங்களில் இதுவும் ஒன்று,  இதனை உடம்பில் உயிர் உள்ளவரை கட்டியிருப்பேன் என்று அண்ணாமலை நேற்று தெரிவித்திருந்தார். 

அதற்கு ஆடு வளர்த்து அண்ணாமலை இதனை வாங்கினாரா?  இதற்கான ரசீதை அவர் வெளியிட தயாரா?  என்று திமுகவைச் சேர்ந்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வினா எழுப்பி இருந்தார். அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது  பதிலளித்துள்ளார். 

"திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), 

ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.  நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.

இதேபோல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர, சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?" என்று  அண்ணாமலை பதில் சவால் வைத்துள்ளார். இந்த விவாதம் மேலும் தொடரும் பட்சத்தில் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கருதலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in