தேரை வடம்பிடித்து இழுக்க எதிர்ப்பு... அமைச்சர் அனிதா ஆவேசம்: பாஜகவினரால் களேபரமான திருவிழா

தேரை வடம்பிடித்து இழுக்க எதிர்ப்பு... அமைச்சர் அனிதா ஆவேசம்: பாஜகவினரால் களேபரமான திருவிழா

அமைச்சர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோயில் திருவிழா களேபரமானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு குமாரகோவில் குமாரசுவாமி திருகோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, கோயிலுக்குள் குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, அமைச்சர்களும், மாற்று சிந்தனையாளர்களும் தேரை வடம்பிடித்து இழுக்கக் கூடாது என்று கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கைகளை உயர்த்தி பாஜகவினருக்கு எதிராக முழக்கமிட்டார். இதனால், அந்த பகுதி களேபரமானது. பாஜகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அக்கட்சியின் எம்எல்ஏ காந்தி உள்பட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து சமயங்களும் அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது. சமூகநீதி தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே கழக அரசின் நோக்கம். கோயிலுக்குள் செல்ல கூடாது என்று கூற பாஜகவினருக்கு எந்த உரிமையும் இல்லை.

கன்னியாகுமரியில் இதுவரை திரும்பி பார்க்கப்படாத கோயில்கள் சீரமைக்கப்பட்டு, பல கோயில்களில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதுபோன்ற நல்ல பணிகளை திமுக அரசு கோயில்களில் செய்வதால்தான் இன்றைக்கு பாஜக கீழ்தரமான மத அரசியலை செய்கிறது. இன்றைக்கு குமாரகோவில் குமராசுவாமி திருகோயிலில் பக்தர்களுடன் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பக்தர்களின் பங்களிப்புடன் தேரை நானும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வடமிழுத்து தொடங்கிவைத்தோம்" என்று கூறியுள்ளார்.

காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் பாஜகவினர்
காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் பாஜகவினர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in