இந்திரா காந்தி குறித்த விமர்சனங்கள்: புயலைக் கிளப்புமா பகுகுணா பற்றிய புதிய புத்தகம்?

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

அரசியல் தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் வெகு அபூர்வமாகத்தான் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் தலைவர்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் அல்லது சக அரசியல் தலைவர்கள்தான் அத்தகைய நூல்களை எழுதுகின்றனர். எப்போதாவது வரலாற்றாசிரியர்களும் எழுதுவது உண்டு. தென்னிந்தியாவுடன் ஒப்பிடுகையில் வட இந்தியாவிலும், கிழக்கு, மேற்குப் பகுதி மாநிலங்களில் பற்றிய புத்தகங்கள் நிறைய எழுதப்படுகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹேமவதி நந்தன் பகுகுணா பற்றி அவருடைய மகள் ரீட்டா பகுகுணா ஜோஷி இப்போது புத்தகம் எழுதியிருக்கிறார்.

பகுகுணாவின் வளர்ச்சியைப் பிடிக்காத சில காங்கிரஸ் தலைவர்கள் எப்படி அன்றைய கட்சித் தலைவரும் பிரதமருமான இந்திரா காந்தியிடம் கோள் மூட்டி, தகப்பனாரின் அரசியல் வாழ்வுக்கு உலை வைத்தனர் என்று விவரித்திருக்கிறார். இதில் உள்ள பெரும்பாலான தகவல்கள் ஏற்கெனவே அரசியல் உலகம் அறிந்தவைதான். சில நுட்பமான தகவல்கள் மட்டும் இன்றைய தலைமுறையினரால் கவனிக்கப்பட வேண்டியவை. புத்தகத்திலிருந்து சில முக்கியத் தகவல்கள்:

1982 கட்வால் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிட்ட எச்என் பகுகுணா வென்றுவிடக் கூடாது என்ற ஆவேசத்துடன் 34 பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறார் இந்திரா காந்தி. தேர்தலில் வாக்குப் பதிவு நாள் ஒரே ஆண்டில் மூன்று முறை மாற்றப்பட்டது. ஒரேயொரு தொகுதியில் அன்றைய பிரதமர் 34 பொதுக் கூட்டங்களைப் பேசியிருப்பதோடு ஒப்பிட்டால், இன்றைய பிரதமர் மோடியின் சாதனை பெரிதல்ல என்று தெரிகிறது!

பகுகுணா உத்தர பிரதேச முதலமைச்சராக இருந்தபோது சுறுசுறுப்பாகப் பணியாற்றினார். நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயல்பட்டார். தானும் ஊழல் செய்யவில்லை, மற்றவர்களையும் ஊழல் செய்ய அனுமதிக்கவில்லை. சட்டப்படியே எதையும் செய்ய வேண்டும் என்பதில் கண்டிப்பு காட்டினார். இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவராகத்தான் முதலில் இருந்தார். ஆனால் வி.பி.சிங்கும் மத்திய அமைச்சர் ராஜேந்திர குமாரி பாஜ்பாயும் அவரைப்பற்றி இந்திரா காந்தி மனதில் சந்தேகங்களை எழுப்பினர். பகுகுணாவுக்குப் பிரதமராகிவிட வேண்டும் என்ற ஆசை இருப்பதாகக் கூறி, இந்திராவைக் கோபம் கொள்ளச் செய்தனர் என்கிறார்கள் சிலர்.

ஹேமவதி நந்தன் பகுகுணா (அஞ்சல் தலை)
ஹேமவதி நந்தன் பகுகுணா (அஞ்சல் தலை)

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் - அத்துடன் பிராமணர் என்பதால் தனக்குப் போட்டியாளராக வந்துவிடுவாரோ என்ற அச்சம் இந்திரா மனதில் ஏற்பட்டது. அதன் பிறகு பகுகுணாவால் சுதந்திரமாகவும் விரைவாகவும் செயல்பட முடியாதபடிக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. கடைசியில் முதலமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்திரா காந்திக்கு மட்டுமல்ல சஞ்சய் காந்திக்கும் பகுகுணாவைப் பிடிக்காமல் போனது. சஞ்சயின் ஆசியில்லாமல் யாரும் மத்திய அரசிலும் மாநிலங்களிலும் கட்சி, ஆட்சி இரண்டிலும் பதவி வகிக்க முடியாது என்ற காலம் ஒன்று இருந்தது.

கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பதவியும் வகிக்காமல் மிகப் பெரிய அதிகார மையமாக சஞ்சய் காந்தி செயல்பட்டார். 1974-ல் மாநிலங்களவை உறுப்பினராக, சுயேச்சையாகப் போட்டியிட்ட தொழிலதிபர் கே.கே. பிர்லா வெற்றி பெற உதவ முடியாது என்று மறுத்துவிட்டாராம் ஹேமவதி நந்தன் பகுகுணா. பிர்லா வெற்றிக்காக இந்திரா காந்தியின் செயலர் யஷ்பால் கபூர் முதலமைச்சருக்கான விருந்தினர் இல்லத்திலிருந்து ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தாராம். டெல்லியில் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றிருந்த பகுகுணா ஊர் திரும்பிய பிறகு யஷ்பாலைக் கடிந்துகொண்டு இடத்தைக் காலி செய்யுமாறு கூறிவிட்டாராம்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு இந்திரா, சஞ்சய் ஆகியோரைச் சந்திக்க கே.கே.பிர்லா டெல்லியில் அவர்களுடைய இல்லத்துக்கு வந்தபோது, பகுகுணாவால்தான் தோல்வி ஏற்பட்டுவிட்டது என்று சஞ்சய் வருந்தினாராம். “உங்களைத் தோற்கடித்தது மட்டுமல்ல என்னையும் ஏமாற்றிவிட்டார் பகுகுணா” என்று பொரிந்து தள்ளினாராம் இந்திரா காந்தி. படிக்கப் படிக்க நிறைய சுவாரசியமான தகவல்கள் இருக்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸுக்கு இப்புத்தகம் உதவுமா?

இந்திரா காந்தியின் முதன்மைச் செயலர் பி.என். ஹக்சர், மத்தியப் பிரதேச முதலமைச்சர் துர்கா பிரசாத் மிஸ்ரா, மத்திய உள்துறை அமைச்சர் உமா சங்கர் தீட்சித், மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ் ஆகியோரும் வி.பி. சிங், ராஜேந்திர குமாரி பாஜ்பாய் போலவே இந்திராவிடம் தன்னுடைய தந்தையைப் பற்றிய சந்தேகங்களை விதைத்தனர் என்று எழுதியிருக்கிறார் ரீட்டா.

காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவிழக்கக் காரணம், மாநிலத் தலைவர்கள் யாரும் வலுவாக இருந்துவிடக் கூடாது என்று இந்திராவின் குடும்பத்தவர்கள் நினைத்ததுதான். கட்சியில் பெரும்பாலான நிர்வாகப் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிப்பதற்குப் பதிலாக, அட்ஹாக் கமிட்டி என்று தற்காலிகமாகக் குழுக்களைத் தொடர்ந்து நியமித்து மக்களிடம் தொடர்பும் கட்சித் தொண்டர்களிடம் செல்வாக்கும் இல்லாத பலர் அவற்றில் இடம் பெற்றது கட்சியை வெகுவாக மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியது.

ரீட்டா பகுகுணா
ரீட்டா பகுகுணா

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளைக் கூறியிருக்கும் இந்த வேளையில், ரீட்டாவின் புத்தகம் ஓரிரு உண்மைகளையும் சொல்லக்கூடும். அதையும் காங்கிரஸ் தலைவர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மீண்டும் காங்கிரஸ் வளர்ச்சி பெற வழியேற்படும். சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் கட்சி, தங்களுடைய உடல்-பொருள்-ஆவி ஆகியவற்றைத் தியாகம் செய்யத் தயங்காத மகோன்னதமானவர்களின் கட்சி, எல்லாவித கருத்துகளுக்கும் இடமளித்து விவாதிக்கவும் கருத்துகளில் மாறுபடவும் வாய்ப்பளித்த ஜனநாயகத் தன்மை நிரம்பியுள்ள கட்சி, மாமன்னர்களும் சாமான்யர்களும் சரிசமமாக அமர்ந்து செயல்பட வழிவகுத்த கட்சி காங்கிரஸ். அந்த காங்கிரஸ் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள, இந்த நூல் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது பயன்படட்டும். நூல் வெளியாகி வாசித்து முடித்த பிறகே அதன் தன்மை தெரியும். ஆனால் பாஜகவில் இணைந்துவிட்ட பிறகு அவருடைய மகள் எழுதிய நூல் என்பதால், இதில் உள்ள அனைத்தையுமே அப்படியே உண்மை என்று கருதிவிட வேண்டிய அவசியமும் இல்லை.

வட இந்தியாவில் உள்ள இந்தப் புத்தகம் எழுதும் பழக்கம் தென்னிந்தியாவில் - குறிப்பாகத் தமிழ்நாட்டில் வளர வேண்டும். திராவிடக் கட்சிகள் உள்பட எல்லா அரசியல் கட்சிகளின் முதல் வரிசைத் தலைவர்களும் தங்களுடைய அரசியல் அனுபவங்களை நூல்களாக எழுத வேண்டும். அது இந்த நாட்டின் அரசியல், பொருளாதார, சட்ட மாணவர்களுக்கு பல தகவல்களைத் தெரிவிக்கும். அந்த வகையில் Hemawati Nandan Bahuguna: A Political Crusader என்ற இந்த நூலை வரவேற்கலாம்.

பகுகுணா யார்?

ஹேமவதி நந்தன் பகுகுணா (1919 ஏப்ரல் 25 - 1989 மார்ச் 17) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசில் உரம் – ரசாயனங்கள் துறை அமைச்சராகவும் சரண்சிங் அரசில் நிதியமைச்சராகவும் , உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் தலைவரும் பிரதமருமான இந்திரா காந்தியால் முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பின்னாளில் ஜகஜீவன்ராமின் ‘ஜனநாயகத்துக்கான காங்கிரஸ்’, சௌத்ரி சரண்சிங் தலைமையிலான ‘பாரதிய லோக் தள்’ கட்சிகளில் சேர்ந்தார். விஜய் பகுகுணா மகன், ரீட்டா பகுகுணா மகள் (பாஜக எம்.பி.). 1984 மக்களவைத் தேர்தலில் அலாகாபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகர் அமிதாப் பச்சனிடம் 1,87,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார் ஹேமவதி நந்தன் பகுகுணா. அத்துடன் அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in