
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் தான், தன் அரசியல் வழிகாட்டி என்று பாஜக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.டி.சோமசேகர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகாவின் துணை முதல்வராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான அவரை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.டி.சோமசேகர் புகழ்ந்து பேசியுள்ளது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.சோமசேகர் இன்று கூறுகையில், " கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தான் எனது அரசியல் வழிகாட்டி. கூட்டுறவுத் துறையில் நான் ஏதாவது சாதித்திருந்தால் அதற்கு அவர்தான் காரணம். அவர் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். ஆரம்பத்தில் எனக்கு ஜே.பி.நகர் தொகுதி வழங்கப்படவில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் டி.கே.சிவகுமார் தான், என்னை ஜே.பி.நகர் இணைச் செயலாளராக நியமித்தார்.
அங்கிருந்து பல சமயங்களில் எனக்கு துணையாக நின்றார். உத்தரஹள்ளி தொகுதிக்கு எனது பெயரை வேட்பாளராக முன்மொழிந்தவர் அவர் தான்" என்று பேசினார். பாஜக சட்டப்பேரவை உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வரை புகழ்ந்து பேசியிருப்பது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் பாஜகவின் எடியூரப்பா அரசிற்கு ஆதரவாக நின்ற 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் எஸ்.டி.சோமசேகரும் ஒருவர். அதன் பின் அவர், பாஜகவில் சேர்ந்து அமைச்சரானார். தற்போது துணை முதல்வரை புகழ்ந்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் அவர் ஐக்கியமாவார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேட்ட போது," சோமசேகரிடம் பேசினால் பிரச்சினை தீர்ந்து விடும்" என்றார்.