கோவை திமுக மேயரின் வன்மம்; கொதிக்கும் வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கோவையில் மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது புகார் அளித்திருந்த சரண்யா என்ற பெண்ணின் கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கி இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், தன்னை எதிர் வீட்டில் இருந்து காலி செய்ய வைக்க மேயர் குடும்பத்தினர் தொல்லை கொடுப்பதாகவும், குப்பைகளையும், அழுகிய பொருட்களையும் வீட்டின் அருகில் போடுவதாகவும், சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும், வீட்டின் முன்பு மந்திரித்த எலுமிச்சை பழங்களை வைப்பதாகவும் மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில், சரண்யா புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், சரண்யாவின் கார் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. காரின் ஒரு பகுதி தீயில் சேதம் அடைந்த நிலையில் இதுகுறித்தும் காவல்துறையில் சரண்யா புகார் அளித்தார்.

புகாரின் பேரில் கோவை மாநகர போலீசாரும், தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து சரண்யாவிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், கார் தீ பிடித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் மீது கவர் போடப்பட்டிருந்த நிலையில், கவரில் பற்றிய தீ காரின் ஒரு பகுதியை சேதமாக்கி இருப்பதும் தெரியவந்தது. இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா அல்லது எதேச்சையாக நடந்ததா என்பது குறித்து துடியலூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஆட்சி அதிகாரம் தனது கையில் இருக்கிறது என்பதற்காக கோவை மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுமக்கள் மீது வன்மத்துடன் நடந்துகொள்வது கண்டனத்திற்குரியது. சில நாட்களுக்கு முன் கோவை மேயர் கல்பனா மற்றும் அவர் தம்பி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சரண்யா அவர்களின் கார் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in