அரசு கல்லூரியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை... செல்ஃபிக்கு அழைத்த நிர்வாகிகள்: பதறிய கல்லூரி முதல்வர் விளக்கம்

அரசு கல்லூரியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை... செல்ஃபிக்கு அழைத்த நிர்வாகிகள்: பதறிய கல்லூரி முதல்வர் விளக்கம்

அரசு கல்லூரியில் பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கும், அண்ணாமலையோடு செல்ஃபி எடுக்கும் நிகழ்வுக்கும் அழைப்புவிடுத்து சமூகவலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் என்ற பெயரில் அறிவிப்பு ஒன்று வாட்ஸ் அப்பில் பரவலானது. அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் வைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனோடு கல்லூரி மாணவ, மாணவிகள் இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையோடு செல்ஃபி எடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ’செல்ஃபி வித் அண்ணா’ எனவும் இதற்கு பெயரிடப்பட்டு வாட்ஸ் அப்பில் இந்தப் பதிவு பரவியது. அரசு கல்லூரியில் பாஜக உறுப்பினர் சேர்க்கையா? என இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகங்கள் வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் பெயரைக் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தவறாகப் பயன்படுத்தி வருவதை அறிகிறோம். இந்த நிகழ்விற்கும், கல்லூரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் கல்லூரி வளாகத்தில் எவ்வித அனுமதியும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in