`தமிழ்நாட்டையே அலற விட்டவர் தான நீங்க': செல்லூர் ராஜுவை போனில் தெறிக்கவிட்ட பாஜக நிர்வாகி

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாஜகவை கடுமையாக சாடி இருந்த நிலையில் பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் ஒருவர் செல்லூர் ராஜுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு விமர்சித்துள்ளார்.

மதுரையில் கடந்த ஜூன் 4-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "தமிழகத்தில் தற்போது, அதிமுக மட்டுமே எதிர்கட்சி, அதிமுக காக்கா கூட்டம் அல்ல, கொள்கை கூட்டம். பாஜகவிற்கு வருவது இரை போட்டால் வரும் காக்கா கூட்டம் போன்றது. பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைச்சாமியெல்லாம் அதிமுக குறித்து பேசுவது வேடிக்கையானது. எல்.முருகன் வேலை பிடித்தார் அவருக்கு ஒரு பதவி, தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் அல்லவா? அதிமுக மீது துரும்பு கொண்டு எறிந்தால், நாங்கள் தூணை கொண்டு எறிவோம்" என்றெல்லாம் பாஜகவை கடுமையாக சாடி இருந்தார்.

இந்நிலையில், செல்லூர் ராஜுவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாஜக தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார், "அண்ணனுடைய பேட்டியைப் பார்த்தோம். அதிமுக மீது துரும்பு கொண்டு எறிந்தால், நாங்கள் தூணை கொண்டு எறிவோம்னு சொல்லி இருந்தீங்க. ரொம்ப நன்றாக இருந்தது" என்று கூறிவிட்டு தொடர்ந்து பேசும் போது "அண்ணன், ஏற்கெனவே மீனாட்சியம்மன் கோயில்ல திருநீறு விற்றீர்களோ?' என்று சுரேஷ்குமார் கேட்டதற்கு, "பிரசாதம் விற்றோம்" என பதிலளித்தார் செல்லூர் ராஜு.

மேலும் சுரேஷ், "அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி, நீங்கள் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஆளு. நீங்க, என்னென்ன சாதனை செய்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், தெர்மாக்கோல் விட்டு தமிழ்நாட்டையே அலற விட்டவர். நீங்கள் அவ்வளவு பெரிய சயின்டிஸ்ட்" என்று விமர்சித்துள்ளார். இது அனைத்தையும் அமைதியாக கேட்ட செல்லூர் ராஜுவின் ஆடியோ தற்போது வெளியாகி இரண்டு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in