
பாஜக மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். இதற்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து பாஜக நிர்வாகிகள் சென்னைக்குப் படையெடுத்து வருகிறார்கள்.
தமிழக பாஜகவிற்கு அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தன. டெய்சி சரண், சூர்யா சிவா ஆடியோ ரிலீஸ், நடிகை காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட், சூர்யா சிவா விலகல் என அதிரடி சம்பவங்கள் பாஜகவில் தொடர்ந்து வருகிறது. பாஜக மூத்த நிர்வாகிகள் சிலரும் அண்ணாமலை தலைமையால் அதிருப்தியிலிருந்து வருகிறார்கள்.
வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருந்து வருகிறது. இந்நிலையில் பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
இதற்காக நாளை காலை 10 மணி அளவில் தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.