
``கட்சி பெயருக்கு களங்கம் விளைவித்தாலோ, கட்சிப் பணிகளில் அலட்சியம் காட்டினாலோ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. டெய்சி சரண்-சூர்யா சிவா ஆடியோ ரிலீஸ், காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட், சூர்யா சிவா பாஜகவிலிருந்து விலகல் என அதிரடி சம்பவங்கள் பாஜகவில் தொடர்ந்து வருகிறது. பாஜக மூத்த நிர்வாகிகள் சிலரும் அண்ணாமலை தலைமையால் அதிருப்தியிலிருந்து வருகிறார்கள். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகு அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் காட்டமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலை பேசுகையில், “சமீப காலமாக பாஜகவினர் பொதுவெளியில் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்று கட்சி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் ஈடுபட்டாலும் என்னுடைய நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். பாரபட்சம் இல்லாமல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் பணியாற்ற வேண்டும். கட்சி வெற்றி பெறுவதற்கு பூத் கமிட்டி அவசியமாக இருக்கிறது. அதனால் 60,000க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். பூத் கமிட்டிகள் அமைக்காத நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் சில நிர்வாகிகள் வாடிய முகத்தோடு வெளியேறினார்களாம்.