படிச்சவங்க கூட பாஜகவைத்தான் ஆதரிக்கிறாங்க!

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பேட்டி
டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

புதிதாய் மதம் மாறுபவர்கள் பழைய ஆட்களைவிட ரொம்பத் தீவிரமாய் கூப்பாடு போடுவார்களே, அப்படி பாஜகவுக்காகத் தீயாய் வேலை செய்கிறார் டாக்டர் சரவணன். சீட் கிடைக்காத வருத்தத்தில் பாஜகவில் சேர்ந்து, அடுத்த நாளே அக்கட்சியில் சீட் வாங்கினாரே, அதே முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன்தான்.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற 40 நாட்களில் 11 போராட்டங்கள், சுமார் 20 நிகழ்ச்சிகள் நடத்தியுள்ள அவரை, 'காமதேனு' பேட்டிக்காகத் தொடர்பு கொண்டோம். பேட்டி என்றதும், கேள்வி கேட்கும் முன்பாகவே 'பிரஸ் மீட்' போலப் பேசத் தொடங்கிவிட்டார் மனிதர்.

"இந்த உலகத்தை கண்ணை மூடிக்கொண்டு சுற்றிவருகையில் எந்த இடத்தில் கடுமையான நாற்றமடிக்கிறதோ, அதுதான் இந்தியா என்று ஒரு ஆங்கில எழுத்தாளன் சொன்னான். அதை மாற்றி இந்தியாவை உலகமே வியக்கும் வகையில் மாற்றியவர் மோடிஜி "என்று ஆரம்பித்து, "பற்றாக்குறை பட்ஜெட்டே போட்டுக்கொண்டிருந்த இந்திய அரசை விரைவிலேயே மிச்ச பட்ஜெட் போடுமளவுக்கு கொண்டுவந்திருக்கிறார் மோடி" என்பது வரை சுமார் 20 நிமிடம் உரையாற்றினார் மருத்துவர். இடையில் பிரேக் போட்டு நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு...

பாரம்பரியமான திமுக குடும்பத்து ஆள் நீங்கள். எப்படி ஒரே மாதத்தில் பிறவி ஆர்எஸ்எஸ்காரர் போலப் பேச முடிகிறது உங்களால்?

(சிரிக்கிறார்). எடுத்த வேலையை கண்ணும் கருத்துமாகச் செய்து முடிப்பவன்தான் இந்த சரவணன். அரசியலுக்கு வந்து 12 வருஷம் ஆகுது. மதிமுகவில் இருக்கும்போதே கொடுக்கப்பட்ட வேலையை மத்தவங்களைவிட, முழு ஈடுபாட்டோட செஞ்சு பேரு வாங்குனவன் நான். அதனால்தான் திமுகவில் நான் சேரும் விழாவில் பேசிய இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சரவணன் எந்த இடத்தில் இருக்காரோ, அந்த இடத்துக்காக உயிரைக்கொடுத்து உழைப்பார்”னு பாராட்டினார்.

மறுபடியும் சொல்கிறேன், ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக மட்டும் நான் கட்சி மாறல. சீட் தராட்டாக்கூட பரவால்ல, “சரவணன் இந்தமுறை வாய்ப்புத்தர முடியல; கோவிச்சுக்காதீங்க” என்று தனிப்பட்ட முறையில் முன்கூட்டியே சொல்லியிருக்கவாவது செய்திருக்கலாம். கலைஞரா இருந்தா அதைத்தான் செஞ்சிருப்பாரு. இத்தனைக்கும் ஒன்றல்ல, இரண்டு இடைத் தேர்தல்களில் திமுகவுக்காக செலவழிச்சவன் நான். அதுவும் எதிர்க்கட்சியா இருந்தப்ப. எம்எல்ஏ ஆன பிறகும்கூட, ஒரு கவுன்சிலர் மாதிரி வீதி வீதியாக மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செஞ்சேன். தொகுதிப் பிரச்சினைக்காக மாவட்ட கலெக்டரை அதிகமுறை சந்தித்த எம்எல்ஏவும் நான்தான்.

சுயமரியாதை பாதிக்கப்பட்டதால்தான் திமுகவைவிட்டு வெளியேறினேனே தவிர, சீட்டுக்காக அல்ல. பாஜகவிலும்தான் எம்எல்ஏ தேர்தலுக்கு நின்று தோற்றுப்போனேன், அதற்காக கட்சியா மாறிட்டேன்? இங்கே என்னை மதிக்கிறாங்க, உழைப்புக்கேற்ற அங்கீகாரமும் தர்றாங்க. அதனால இருக்கிறேன்.

மாவட்ட தலைவரானபோது...
மாவட்ட தலைவரானபோது...

பாஜகவில் மாவட்ட தலைவரான பிறகான அனுபவம் எப்படியிருக்கு?

நெருங்கிப் பாத்தா, நம்ம மக்கள்ல 99 சதவீதம் பேரு சாமி கும்பிடுறவங்களாத்தான் இருக்காங்க. தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு மேலே பெரிய ஈர்ப்பில்லைங்கிறது உண்மைதான். கடந்த 60 வருஷமா திராவிட இயக்கங்களே இங்க கோலோச்சுறதால, மத்திய அரசு என்றாலே ஏதோ ஆகாத அரசாங்கம்ங்கிற மாதிரியான எண்ணத்தை மக்கள் மத்தியில கொண்டுவந்திட்டாங்க. மத்திய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதை சந்தேகமாவே பார்க்கிற மனநிலை இங்க இருக்குது.

தனிநாடு கோரிக்கையை அண்ணாவே கைவிட்டுட்டாலும், அந்த நெருப்பை அணையவிடாம பாத்துக்குது திமுக. அதனாலதான் மத்திய அரச ஒன்றிய அரசுன்னு சொல்லிக்கிட்டு திரியுறாங்க. தமிழிசை அக்கா தலைவரானதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மனசுல மாற்றம் ஏற்பட்டு, அண்ணாமலை சார் காலத்துல பாஜகன்னாலே மக்கள் மரியாதையாப் பாக்குறாங்க. ஃபேஸ்புக், ட்விட்டர்னு நான் புழங்குற இடத்துல எல்லாம் பார்க்கிறேன், படிச்சவங்க கூட பாஜகவைத்தான் ஆதரிக்கிறாங்க. நான் எந்த இடத்துக்கு, எந்தப் பிரச்சினைக்காகப் போனாலும் மக்கள் ஆர்வமா ரிசீவ் பண்றாங்க. அது தர்ற உற்சாகத்துலதான், கட்சிக்கொள்கைகளையும், மத்திய அரசு திட்டங்களையும் மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கிற வேலையை இன்னும் தீவிரமாச் செய்யுறேன். திமுகவோட ஒப்பிடும்போது, இங்கே நிர்வாகிகள், தொண்டர்களோட ஒத்துழைப்பும் ரொம்ப நல்லாயிருக்குது.

கலெக்டரிடம்...
கலெக்டரிடம்...

அரசு அலுவலகத்தில் மோடி படம் வெக்கணும், மதுரையில வாஜ்பாய்க்கு சிலை வெக்கணும்னு இதுவரைக்கும் எந்த பாஜக தலைவரும் கேட்டதில்லை. உங்களுக்கு எப்படி அது தோணுச்சு?

சும்மா விளம்பரத்துக்காக அந்த கோரிக்கையை நான் வெக்கலை. அரசு அலுவலகங்களில் யாருடைய படங்களை எல்லாம் வெக்கலாம்னு அரசாணையே இருக்குது. அதுல பாரதப் பிரதமர் பேரும் வருது. அந்த அரசாணையோட நகலோட தான் மதுரை கலெக்டரைச் சந்திச்சு, மோடிஜி புகைப்படத்தக் கொடுத்தேன். இன்னும் வெக்கல. வெக்கிற வரைக்கும் நாங்களும் விடுறதா இல்ல. இவ்வளவு பெரிய நாட்டுல ஒரு நல்ல சாலைகூட இல்லியான்னு வெளிநாட்டுக்காரங்க முகத்தைச் சுழிச்ச நேரத்துல, அனைத்து முக்கியமான நகரங்களையும் இணைக்கிறாப்ல நான்குவழிச்சாலை திட்டத்தைக் கொண்டுவந்தாரு முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய். அவருக்கு குமரி - ராமேஸ்வரம் நான்குவழிச்சாலைகள் சந்திக்கிற இடமான மதுரை விரகனூர் ரவுண்டானாவுல சிலை வெக்கணும்னு கேட்கிறதுல என்ன தப்பு இருக்குது? டிசம்பர் 25-ம் தேதி அவரோட பிறந்தநாள். அதற்குள்ள ஒண்ணு நீங்களே சிலையை வைங்க, இல்ல எங்களுக்கு அனுமதி கொடுங்க நாங்களே வெச்சுக்கிறோம்னு கலெக்டர்கிட்ட சொல்லியிருக்கேன்.

முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் உடல் மறுகூறாய்வு நடந்தப்ப, என்னையும் உள்ளே விடணும்னு தகராறு பண்ணியிருக்கீங்க. இப்படியே டாக்டரா இருக்கிற எல்லா அரசியல்வாதியும் கிளம்புனா நாடு தாங்குமா?

நான் ஒண்ணும் மிரட்டியோ, அத்துமீறியோ பிரேத பரிசோதனைக்கூடத்துக்குள்ளாற போகலியே? போலீஸாரால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார் அந்தக் கல்லூரி மாணவர். அவசர அவசரமாக பிரேத பரிசோதனையை நடத்தி, உண்மையை மூடிமறைக்கப் பார்த்தாங்க. உறவினர்கள் தரப்புல உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு வாங்குனதோட, உறவினர்களும் உடனிருக்கலாம்னு உத்தரவு வாங்குனாங்க.

அந்த உத்தரவின் அடிப்படையில்தான் நான் உள்ளே போனேன். முதல்ல அனுமதிக்க மறுத்தவங்க, அப்புறம் மாவட்ட கலெக்டர், மருத்துவக் கல்லூரி டீன் அனுமதியோட என்னய உள்ளே விட்டாங்க. மாணவர் உடல்ல சந்தேகப்படும்படியான காயங்கள் இருந்துச்சு. அவரோட வயிற்றுக்குள் இருந்த உணவு உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாட்டுல சோதனை செய்யக்கூடாது. அப்படிச் செய்தா அவர் விஷம் குடிச்சிச் செத்தார்னு மாற்றிடுவாங்க. எனவே, எய்ம்ஸ் மாதிரியான மத்திய அரசு மருத்துவமனைகளில் தான் சோதனை செய்யணும்னு வலியுறுத்தியிருக்கிறேன். தூத்துக்குடி பெலிக்ஸ் கொலையில குதிச்ச ஸ்டாலினும், திமுகவினரும் இப்ப கமுக்கமா இருக்கலாம். அதுக்காக நாங்களும் அப்படியே இருக்கணுமா?

மாரிதாஸ் கைதின் போது...
மாரிதாஸ் கைதின் போது...

மாரிதாஸை கைது செய்றப்ப முதல் ஆளா வீட்டுக்குப் போய் போலீஸ்கிட்ட சண்டை போட்டிருக்கீங்க. அங்கே என்ன நடந்துச்சு?

புதூர் ஏரியாவுல ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தப்ப, மாரிதாஸோட மனைவி போன் போட்டு விஷயத்தைச் சொன்னாங்க. உடனே காரை அவரோட வீட்டுக்கு விட்டேன். கூடவே, நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்திட்டாங்க. நான் போனப்ப, மாரிதாஸ் கையைப்பிடிச்சி ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டு இருந்தாங்க போலீஸ்காரங்க. “என்ன சார் சம்மன் கொடுக்கல, என்ன செக்‌ஷன்ல கைது பண்றீங்கன்னு சொல்லல, அவர் என்ன கொலையா பண்ணிட்டாரு? போய் சம்மன் கொண்டுவாங்க, நாங்களே விசாரணைக்கு அவரை அழைச்சிட்டு வாரோம்”னு சொன்னோம். உடனே, வெளியில போய் உயரதிகாரிங்ககிட்ட பேசுனாங்க. மறுபடியும் வந்தாங்க. மறுபடியும் பேசுனாங்க. மேலிடத்து அழுத்தம் இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டோம்.

கடைசியில, டி.சியே வந்து, “அவரை நான்பெயிலபிள் செக் ஷன்ல அரஸ்ட் பண்றேங்க. அதுக்கு சம்மன் கொடுக்கத் தேவையில்லை”ன்னு சொல்லி, கூட்டிட்டுப் போனாங்க. அதைத் தொண்டர்கள் ஏத்துக்காததாலதான் அங்கே தள்ளுமுள்ளு ஆச்சு. பகல் 12 மணிக்கு பிடிச்ச ஆளை, அங்கே இங்கே அலைக்கழிச்சி, கோர்ட்ல ஆஜர்படுத்தும்போது ராத்திரி 9.30 மணி. அப்பவும் மாஜிஸ்திரேட் கிட்ட எஃப்ஐஆர் காபி கொடுக்கல. அதுவரைக்கும் என்ன செக் ஷன் போடலாம்னு அடிச்சி அடிச்சி எழுதிக்கிட்டிருந்தது போலீஸ்.

எப்படியாவது ஒரு நாளாவது அவரை ஜெயில்ல வெச்சிடணும்ங்கிற வேகம்தான் போலீஸ்கிட்ட இருந்துதே தவிர, நியாயமான நடவடிக்கை இல்லை. முப்படைத் தளபதி இறப்பு சம்பந்தமா சில பேரு மோசமா ட்விட் பண்ணிருந்தாங்க. அவங்க யாரையும் போலீஸ் அரஸ்ட் பண்ணல. ஆனா, அதுக்குப் பதிலடி கொடுத்தவரைப் போய் கைது செஞ்சிருக்காங்க. தடுத்த என் மேலயும் 5 வழக்குப் போட்டுருக்காங்க.

"எல்லையில் ராணுவ வீரர்கள்...", "தேச பக்தி" என்று எப்போதும் பேசுகிற பாஜகவின் ஆளுநரும் சரி, கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரும் சரி, பக்கத்திலேயே இருந்தும்கூட முப்படை தளபதி உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போகவில்லையே? இதுதான் உங்கள் கட்சியின் தேச பக்தியா?

அந்த நேரத்துல அவங்க எந்த இடத்துல, எப்படியான சூழல்ல இருந்தாங்கன்னும் பார்க்கணுமில்ல. கட்சி சார்புல அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செஞ்சிட்டு, அந்தந்த ஊர்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்துனோமே? நான் கூட சித்திரை தமிழ்ப் புத்தாண்டை மாற்றக்கூடாதுன்னு ஒரு போராட்டம் அறிவிச்சிருந்தேன். அதை ஒத்திவெச்சிட்டு, அஞ்சலி செலுத்துனேனே?

மருதுபாண்டியர் அரசியல்...
மருதுபாண்டியர் அரசியல்...

மதுரை மேயர் பதவியை குறிவெச்சுத்தான் நீங்க இவ்வளவு சுறுசுறுப்பா வேலை செய்றீங்களாமே?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கூட்டணியுடன் சேர்ந்துதான் எதிர்கொள்ளப் போறோம்னு எங்க தலைவர் சொல்லியிருக்காரு. அப்படி என்றால், மதுரை மேயர் பதவியை பாஜகவுக்கு கேட்கணும்னு தலைவர்கிட்ட வேண்டுகோள் வைப்போம். மதுரையில் மொத்தம் 100 வார்டுகள்தான். ஆனால், அதுக்குள்ளேயே 300-க்கும் அதிகமானோர் கவுன்சிலர் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்திருக்காங்க. பாஜககாரங்க மட்டுமல்லாம, சமூக சேவகர்கள், ரோட்டரி கவர்னர்கள்னு நல்ல ஆட்களாகப் பார்த்து, தாமரைச் சின்னத்தில் நிறுத்துவோம்.

கூட்டணி இருந்தாலும், இல்லாட்டியும் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தத் தயாராகிட்டோம். எனக்கு மேயர் வாய்ப்பு உண்டா இல்லையாங்கிறது தலைவர் முடிவு பண்ண வேண்டியது. முதல்ல மதுரையை ஆணுக்கு ஒதுக்குறாங்களா, பெண்ணுக்கு ஒதுக்குறாங்களான்னே இன்னும் தெரியலியே? என்ன நடந்தாலும் சரி களப்பணிக்கு நாங்க தயார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in