5 மாநில தேர்தல் மட்டுமல்ல, 2024 மக்களவைத் தேர்தலுக்குமான கடைசி பிரம்மாஸ்திரமாக காங்கிரஸ் கட்சி நம்பியிருப்பது சாதிவாரி கணக்கெடுப்பைத்தான். தொடக்கத்தில் இதனை பிரதமர் மோடி கடுமையாக எதிர்த்தாலும், தற்போது, “நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் அல்ல” என்று சொல்லியிருக்கிறார் அமித் ஷா. பாஜகவின் இந்த திடீர் மனமாற்றம் அக்கட்சிக்கு அரசியல் ரீதியான பலனைத் தருமா?
சுதந்திரத்துக்கு பின்னர் இடஒதுக்கீடு என்பது, சமூகத்தின் கடைநிலை மக்களை கைதூக்கிவிடுவதற்கான பெரும் கருவியாக இருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டிலும் சில முரண்பாடுகள் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பல காலமாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் கணக்கெடுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக சமூக,பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு துல்லியமான அளவில் இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை கடந்த காலங்களில் பெரிய அளவில் அலட்டிக்கொண்டதே இல்லை. பல்வேறு அழுத்தங்களால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதி ரீதியிலான விவரங்களையும் திரட்டியது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. ஆனால், அதன்பின்னர் அந்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தற்போது, “மத்தியில் நாங்கள் ஆட்சியமைத்தால் முதல் கையெழுத்தே, சாதிவாரி கணக்கெடுப்புக்கானதுதான்” என்கிறது காங்கிரஸ். இதுதான் தனது தேர்தல் வெற்றிக்கான துருப்புச் சீட்டாக இருக்குமென்றும் அக்கட்சி உறுதியாக நம்புகிறது.
பாஜக இப்போதுவரை சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு முழு ஆதரவு வழங்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பைக் கடுமையாக பிரதமர் மோடியே எதிர்த்தார். “இதன்மூலம் இந்துக்களை பிரிக்க விரும்புகிறார்கள். ஏழைகளை பிரிக்க விரும்புகிறார்கள். சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்க நினைக்கிறார்கள்” என்று இந்த 5 மாநில தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம், “சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம்” என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், “பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரேயொரு ஓபிசிதான் முதல்வராக உள்ளார். காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களில் 3ல் ஓபிசி வகுப்பினர்தான் முதல்வர்” என்று ராகுல் சொன்னது கவனத்தைப் பெற்றது. இது இந்தத் தேர்தலில் சிறப்பாக எதிரொலிக்கவும் செய்தது.
தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவில் கவனம் பெறாத நிலையிலிருந்த காங்கிரஸ், இப்போது ஓபிசி அரசியலின் செல்வாக்கால் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பலம் பெற்றுள்ளது. கடைசி நேரத்தில் தெலங்கானா பாஜகவே ஓபிசி வகுப்பைச் சேர்ந்த கிஷன் ரெட்டியை தலைவராக்கியது. ஆனாலும் பாஜகவால் அங்கே பெரிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. மற்ற மாநிலங்களுக்கும் இந்த எழுச்சி பரவும் சூழல் கணிசமாக உள்ளது என்பதை பாஜக தற்போது புரிந்துகொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே, “நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் இல்லை, அதுகுறித்த முழுமையாக விவாதித்து முடிவெடுக்க தயாராக உள்ளோம்” என்கிறார் அமித் ஷா.
ஒருங்கிணைந்த இந்துக்களின் வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் செயல்திட்டம். சாதிரீதியாக கணக்கெடுக்கும் ஆய்வுகள் தங்களுக்கு பின்னடைவை உருவாக்கும் என்று அக்கட்சி கருதுகிறது. இதுதான் சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக கைகொள்ளாததற்கான காரணம். தற்போது வேறு வழியின்றி பாஜக இதனை தீவிரமாக எதிர்க்கும் போக்கை கைவிட்டுள்ளது. இது தேர்தலில் பலன் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை ஒருவேளை பாஜக வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்தால் சித்தாந்த ரீதியாகவும் பாஜக பல விமர்சனங்களை எதிர்கொள்ளும்.
பீகாரில் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியானது. அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, பிற்படுத்தப்பட்டோர் 27.12%, எஸ்சி 19.65%, எஸ்டி 1.68, இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52% உள்ளதாக துல்லியமாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடந்து அம்மாநிலத்தில் இடஒதுக்கீடு 75% ஆக உயர்த்தப்பட்டது.
பீகாரின் இந்த நடவடிக்கை மற்ற மாநில மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. விரைவில் கர்நாடகா, ஒடிசாவில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடப் போவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களும் கணக்கெடுப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. அந்தவகையில் தேசிய அளவில் இது பேசுபொருளாகியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை என பாஜக தற்போது பேசியிருப்பது அரசியல் நாடகம் என்று விமர்சிக்கின்றன எதிர்க்கட்சிகள். சிலவாரங்களுக்கு முன்புகூட இதனை கடுமையாக எதிர்த்த பாஜக, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சில நாட்களுக்கு முன்பு, சாதி வாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் தொனியில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.
அப்படியானால் 5 மாநில தேர்தலில் ஓபிசியினரை முன்வைத்து காங்கிரஸ் கையிலெடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம். ஒருவேளை, தேர்தல் முடிவுகளில் காங்கிரஸின் கை ஓங்குமானால் அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் இது இருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் வரும் மக்களவை தேர்தலின்போது, “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்” என வாக்குறுதி அளிக்கவும் பாஜக தயங்காது.
தேசிய அளவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்த கணக்கெடுப்பை திமுக தடுத்ததாக பகிரங்கமாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒருவேளை, இதனை அதிமுக கையில் எடுத்து “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்” என அறிவித்தால், மக்களவைத் தேர்தலில் இது தமிழ்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.