மேயர் எங்களுக்கு... துணை மேயர் உங்களுக்கு!

காங்கிரஸிடமே பேரம் பேசும் நாகர்கோவில் பாஜக
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே பெரும்பான்மை இடங்களில் வாகை சூடியது. நாகர்கோவில் மாநகராட்சியிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களை வென்றிருக்கும் நிலையில், மேயர் ரேஸில் பாஜக முந்திவிடவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன்.

நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதன் பின்னால், பாஜகவின் கோரிக்கையே பிரதானமாக இருந்தது. நாகர்கோவில் நகரசபையை ஏற்கெனவே கைப்பற்றி இருக்கும் பாஜக, இங்கு தனக்குள்ள செல்வாக்கை நம்பியே அதிமுக அரசிடம் இந்தக் கோரிக்கையை எழுப்பியது. இருப்பினும், இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்டது. ஆனாலும், பாஜக தான் முதல் மேயரைக் கைப்பற்றும் என பாஜகவினர் அடித்துச் சொல்கின்றனர். அதன் பின்னால் சில அதிரவைக்கும் புள்ளிவிவங்களையும் பட்டியல் இடுகின்றனர்.

மகேஷ் (திமுக)
மகேஷ் (திமுக)

இங்கு மொத்தம் உள்ள 52 வார்டுகளில் திமுக 24 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மதிமுக ஒரு வார்டிலும் வென்றுள்ளது. பாஜக 11 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வென்றுள்ளனர். மேயர் பதவியைக் கைப்பற்ற 27 வாக்குகள் தேவை என்னும் நிலையில், திமுக கூட்டணி வசம் 32 வாக்குகள் இருப்பதால் மேயர் இருக்கையில் அமர்வதில், தங்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என கணக்குப் போடுகிறது திமுக. இருப்பினும் இறுதி முடிவு எங்களுக்கே சாதகமாக இருக்கும் என சிரிக்கிறது பாஜக முகாம்.

நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் மகேஷ், திமுகவின் மேயர் வேட்பாளர் பரிசீலனையில் முன்னிலையில் உள்ளார். மு.க.ஸ்டாலினின் குட் புக்கிலும் இவர் உள்ளார். இதுவரை முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் நிழலிலேயே அரசியல் செய்துவந்த மகேஷ், மனோதங்கராஜ் அமைச்சரானதுமே அவரது நிழலில் ஒதுங்கினார். ஏற்கெனவே சுரேஷ்ராஜனுக்கும், மனோதங்கராஜுக்கும் ஏழாம் பொருத்தம். அந்த ஜோதியில், மனோதங்கராஜின் பின்னால் இருந்து ஓடத் தொடங்கினார் மகேஷ். மனோதங்கராஜ் தயவில் எப்படியும் மேயராகிவிடலாம் என மனக்கணக்குப் போடுகிறார் மகேஷ். ஆனால், சுரேஷ்ராஜன் முகாம் இதை அவ்வளவாய் ரசிக்கவில்லை.

சுரேஷ்ராஜன்
சுரேஷ்ராஜன்

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த வெற்றியாளர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், “மேயர் யார் என்பதை தளபதி தான் முடிவு செய்வார்” என மனோதங்கராஜையும் வைத்துக் கொண்டு அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இதைச் சுட்டிக்காட்டும் சுரேஷ்ராஜன் ஆதரவாளர்கள், “மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மேயர் பதவிக்காக மூன்று நபர்களின் பெயர்களை அண்ணன் தலைமைக்கு அனுப்பி இருக்கிறார். அதில் மகேஷ் பெயர் இருப்பதாகத் தெரியவில்லை” என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மகேஷை, மேயர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் திமுக கவுன்சிலர்களுக்குள்ளேயே பலருக்கும் தயக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள். தடாலடியாக பேசக்கூடியவர், அனுசரணையாக நடந்துகொள்ளத் தெரியாதவர் என்பது போன்ற மகேஷின் குணாதிசயங்களே திமுக கவுன்சிலர்களை யோசிக்க வைக்கிறதாம்.

மீனா தேவ்
மீனா தேவ்

மாநிலத்தை ஆளும் முகாம் இப்படி யோசனையில் இருக்க... மத்தியை ஆளும் முகாம் ஏக குஷியில் இருக்கிறது. வெறும் 11 கவுன்சிலர்களை மட்டுமே வைத்திருக்கும் பாஜக, மேயர் வேட்பாளராக மீனா தேவை முன்கூட்டியே அறிவித்துவிட்டது. மீனாதேவ் ஏற்கெனவே இருமுறை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்தவர். அவர் மீது இருக்கும் க்ளீன் இமேஜை நம்பியே அவரை நிறுத்தி இருக்கிறது பாஜக தலைமை.

அதிமுக கவுன்சிலர்கள் 7 பேருடன் சுயேச்சைகள் இருவரையும் சேர்த்துக் கொண்டு, தங்களுக்கு 20 கவுன்சிலர்கள் ஆதரவு இருப்பதாகச் சொல்லும் பாஜக, திமுகவுக்குள் இருக்கும் மகேஷ் எதிர்ப்பு ஓட்டுகளை மலைபோல் நம்புகிறது. மீனா தேவ் முன்பு நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, கவுன்சிலர்களாக இருந்த சிலரும் இப்போது திமுகவில் கவுன்சிலராகி இருக்கிறார்கள். “மீனா தேவ் காலத்தில் உங்களுக்காக என்னவெல்லாம் செய்து கொடுக்கப்பட்டது என்பதை நினைத்துப் பாருங்கள். மகேஷ் மேயரானால் இதெல்லாம் நடக்குமா?” என்றெல்லாம் அந்தக் கவுன்சிலர்களிடம் பேசி வருகிறது பாஜக. எப்படியாவது நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், டெல்லி பாஜக தலைமையிலிருந்து 5 சி வரைக்கும் நாகர்கோவில் வந்திறங்கியிருப்பதாகவும் ஒரு பேச்சு அலையடிக்கிறது.

இதனிடையே, மேயர் தேர்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டுமானால், தங்களுக்கு துணை மேயர் இருக்கையை விட்டுக் கொடுக்க வேண்டும் என செக் வைக்கிறது காங்கிரஸ். ஆனால், தங்கள் கட்சியில் பலரும் துணை மேயர் கனவில் மிதப்பதால், இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறது திமுக. இதைத் தெரிந்து கொண்ட பாஜக, “பேசாமல் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள்... நாங்கள் உங்களை துணை மேயர் ஆக்குகிறோம்” என காங்கிரஸுக்கு ஆசை வார்த்தைகளை வீசிக் கொண்டிருக்கிறது. மண்டலத் தலைவர் உள்ளிட்ட பதவிகளைத் தருவதாக, மகேஷ் எதிர்ப்பு திமுகவினரிடமும் பாஜக தரப்பிலிருந்து பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

கடந்த உள்ளாட்சித் தேர்தலில், குமரி மாவட்டத்தில் பாஜக வசம் 13 பேரூராட்சிகளும், ஒரு பேரூராட்சியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை (விலவூர்) தலைவரும் இருந்தனர். ஆனால் இந்தத் தேர்தலில், பாஜகவுக்கு 5 பேரூராட்சிகள் மட்டுமே வசமாகும் சூழல் இருக்கிறது. ஆனாலும், “முன்பைப்போல் 13 பேரூராட்சிகளை இம்முறையும் நிச்சயம் கைப்பற்றுவோம். அதற்காக சுயேச்சைகளிடம் பேசிவருகிறோம். பத்மநாபபுரம் நகராட்சியில் பாஜக 7 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் வென்றுள்ளது. அங்கே, 6 சுயேச்சைகள் வென்றுள்ளதால் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். தேர்தல் நடக்கவிருக்கும் மார்ச் 4-ம் தேதி நாங்கள் யார் என்பதை இங்குள்ளவர்களுக்குப் புரியவைப்போம்” என்கிறார்கள் பாஜகவினர்.

அப்படி என்னதான் அதிசயம் நிகழ்த்தப் போகிறது நாகர்கோவில் பாஜக என்பதை, நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in