ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருடன் தமிழக பாஜக தலைவர்கள் தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தனித்தனியே வேட்பாளரை அறிவித்துவிட்டு பாஜகவின் ஆதரவுக்குகாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இருவரையும் இணைத்து பொது வேட்பாளரை நிறுத்த பாஜக முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளதாக தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் இரட்டைத்தலைமையே நீடிக்கிறது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 35 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஈபிஎஸ்சை சந்தித்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தி்ற்கு தமிழக பாஜக தலைவர்கள் சென்றனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’’தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து இன்னும் சில மணி நேரங்களில் அறிப்போம்’’ என குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் டெல்லிக்கு சென்று அகில இந்திய தலைமைகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.