மறுபடியும் டெல்லி செல்லும் மணிப்பூர் தலைவர்கள்: முதல்வர் யார் என முடிவாகுமா?

மறுபடியும் டெல்லி செல்லும் மணிப்பூர் தலைவர்கள்: முதல்வர் யார் என முடிவாகுமா?
பிரதமர் மோடியுடன் பீரேன் சிங்

60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், பாஜக 32 இடங்களை வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், முதல்வர் யார் என்பதில் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது.

2017 மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்ற நிலையில், என்.பீரேன் சிங் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 வரை காங்கிரஸிலும் அதற்கு முன்னர் ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியிலும் இருந்தவர் அவர். அந்தத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்த பிஸ்வஜித் சிங்குக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கட்சியில் நீண்டகாலம் அங்கம் வகிக்கும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. சென்ற முறை கைநழுவிய வாய்ப்பை இந்த முறை எப்படியேனும் கைப்பற்ற வேண்டும் எனும் முனைப்பில் பிஸ்வஜித் இருக்கிறார்.

இந்தத் தேர்தலிலும் முதல்வர் முகமாக யாரையும் பாஜக முன்னிறுத்தவில்லை. மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களே பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர். அதேவேளையில், பிரச்சாரங்களில் பீரேன் சிங்கும் முழுமூச்சாக ஈடுபட்டார்.

இப்படியான குழப்பத்துக்கு மத்தியில், இருவரில் யாரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தாலும், கட்சிக்குள் அதிருப்திக் குழுக்கள் உருவாகலாம் என்றே கருதப்படுகிறது.

பிஸ்வஜித் சிங்
பிஸ்வஜித் சிங்

செவ்வாய்க்கிழமை (மார்ச் 15), மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் மணிப்பூர் மாநில பாஜக தலைவர் ஏ.சாரதாவும் டெல்லி சென்றார். பிரதமர் மோடியை பீரேன் சிங் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து அவர்தான் மீண்டும் முதல்வராவார் எனப் பேச்சுக்கள் எழுந்தன. ஆனாலும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

போகும்போது மூவரும் ஒன்றாகச் சென்றாலும், வரும்போது பீரேன் சிங், சாரதா ஆகியோர் ஒரு விமானத்திலும், பிஸ்வஜித் மட்டும் தனியாக வேறொரு விமானத்திலும் மணிப்பூர் திரும்பினர். மூவரும் டெல்லி சென்றது வெற்றியைக் கொண்டாடத்தான் என்று இம்பால் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பிஸ்வஜித் கூறினார்.

இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லிக்குச் செல்லும் பீரேன் சிங்கும், பிஸ்வஜித்தும், இரவு 8 மணிக்கு பாஜகவின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்கள். எப்படியும் மார்ச் 20-ல் முதல்வர் வேட்பாளர் யார் எனத் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருவரின் இன்றைய டெல்லி பயணம் அதற்கு அச்சாரமிடுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.