‘கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகிறீர்கள்… மீண்டும் திமுக களமிறங்கிவிடும்’ - அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

‘கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகிறீர்கள்… மீண்டும் திமுக களமிறங்கிவிடும்’ - அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

“தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசி வருவது சரியல்ல. அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய திமுக காரன் மீண்டும் வந்துவிடுவான்” என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக பேசியுள்ளார்.

தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று இரவு நடைபெற்றது. பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் ஓராண்டு சாதனை ஆட்சியில் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து காப்பியடித்து உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என பிரதமர் மோடி அறிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆரம்பமாகி உள்ளது. குறிப்பாக கோடநாடு வழக்கில் தோண்ட, தோண்ட புதிய புதிய விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இந்த விவகாரத்தில் எந்தெந்த முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது மக்கள் மன்றத்திற்குத் தெரியவரும்” என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழகத்தில் பிள்ளை பிடிக்கும் வேலையைப் பாஜககாரர்கள் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசையைப் பிடித்து பாஜகவில் சேர்த்தனர். தற்போது திருச்சி சிவாவின் மகனைப் பிடித்து பாஜகவில் சேர்த்துள்ளனர். தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசி வருவது சரியல்ல. பழைய திமுக காரன் மீண்டும் வந்துவிடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்படி அவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன். இது போல, அண்ணாவைப் பற்றி தவறுதலாக கிருபானந்த வாரியார் பேசினார். இதன் காரணமாக அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைதான் அண்ணாமலைக்கும் ஏற்படும்” என்றார். அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in