நாட்டு வெடிகுண்டு வீசி இருவரைக் கொல்ல முயன்ற பாஜக பிரமுகர்: வெளிச்சத்திற்கு வந்த பெண் விவகாரம்

நாட்டு வெடிகுண்டு வீசி இருவரைக் கொல்ல முயன்ற பாஜக பிரமுகர்: வெளிச்சத்திற்கு வந்த பெண் விவகாரம்

நெல்லையில் காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் பாஜக பிரமுகர் உள்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண் விவகாரம் தொடர்பாக இந்த கொலை முயற்சி நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை டவுண் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன் ஐயப்பனும், அவரது நண்பர் கலையும் ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக 2 பைக்குகளில் வந்தனர். அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஐயப்பன், கலை மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. அது பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதனால் ஐயப்பனும், கலையும் உயிர் தப்பி ஓட ஆரம்பித்தனர்.

அப்போது காரில் இருந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்கள் இருவரையும் கொலை செய்ய துரத்தியது. ஆனால் ஐயப்பனும், கலையும் அருகில் இருந்த டவுண் காவல் நிலையத்திற்குள் தஞ்சமடைந்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர்கள் விஜய்குமார், ராஜேஸ்வரன் ஆகியோர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி. காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் டவுண் பகுதியைச் சேர்ந்த பூலித்துரை, அவர்களது உறவினர்களான இசக்கிமணி, அஜித்குமார், ராஜேஷ் எனத் தெரியவந்தது. அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது பெண் விவகாரம் தொடர்பாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

பாஜக பிரமுகரான பூலித்துரைக்கும், ஐயப்பனுக்கும் இடையே பெண் தொடர்பான விவகாரத்தில் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூலித்துரை ஓட்டலில் சாப்பிட வந்த ஐயப்பன், கலை ஆகிய இருவரையும் தனது உறவினர்களுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பூலித்துரை உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து கார் மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். பெண் விவகாரத்தில் இருவரை நாட்டு வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை செய்ய முயன்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in