பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் இரவில் கைது: அலுவலகத்தில் புகுந்து போலீஸ் அதிரடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர்  கிருஷ்ணகுமார் முருகன்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன்

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11-ம் தேதி வடசென்னையில் பல்வேறு பகுதியில் தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து போலி பத்திரிகை பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி 5-வது மண்டலம் உதவி பொறியாளர் ராஜ்குமார், போஸ்டர் ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதுடன் இதுபோன்று தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பினார். எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போஸ்டர் ஒட்டியதால் உதவி பொறியாளர் ராஜ்குமார் எக்ஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதனைத் தொடரந்து துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இருவரது புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டியதாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிலிப்ராஜ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் மற்றும் இருசக்கர வாகனம், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போஸ்டர் விவகாரத்தில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், பிலிப்ஸ் ராஜ் அளித்த தகவலின் பேரில் போஸ்டரை கொடுத்ததாக இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சத்தியநாதன் மீது ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்தது தொடர்பாக கேரள கெஸ்ட் ஹவுஸ் தாக்கியது, இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கைதை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது உள்ளிட்ட வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும், சத்தியநாதனிடம் விசாரணை மேற்கொண்டதில் பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் என்பவர் போஸ்டர்களை சென்னையில் ஒட்டச் சொல்லி கொடுத்தது தெரியவந்ததை அடுத்து சிவகுருநாதனையும் போலீஸார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் சிவகுருநாதன் 5 ஆயிரம் போஸ்டரை சிவகாசியில் அச்சடித்து கொரியர் மூலம் சென்னை கொண்டு வந்து இரு வழக்கறிஞர்கள் உதவியுடன் சத்தியநாதன், பிலிப்ராஜ் என்பவரை வைத்து சென்னையில் பல்வேறு இடங்களில் அவற்றை ஒட்டியது தெரியவந்தது.

கிருஷ்ணகுமார் முருகன்
கிருஷ்ணகுமார் முருகன்

கைதான நபர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதன் பெயரில் போஸ்டர் ஒட்டியது அம்பலமானது. குறிப்பாக, வாரமிருமுறை பத்திரிகை ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கார்ட்டூன் சித்திரம் வெளியானது போல், தமிழக முதல்வரையும் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து கிருஷ்ணகுமார் முருகன் சிவகுருநாதனுக்கு அனுப்பியதும் இதற்காக 35 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கெனவே சிவகுருநாதன் சத்தியநாதன் பிலிப்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக ஆதரவாளரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளருமான கிருஷ்ணகுமார் முருகனை நேற்றிரவு போலீஸார் அடையாறில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in