‘மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்’ - எச்சரிக்கும் அண்ணாமலை

கூட்டத்தில் பேசும் அண்ணாமலை
கூட்டத்தில் பேசும் அண்ணாமலை

மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று திமுக அரசுக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் எட்டாண்டு கால சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று இரவு திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக திருச்சி மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். வாண வேடிக்கைகள் முழங்கின. இந்தப் பொதுக்கூட்டத்தால் மாநகரின் முக்கியப் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பாஜக பொதுக்கூட்டம் என்றால் சில நூறு பேர் மட்டுமே வருவார்கள். ஆனால் நேற்றைய கூட்டத்துக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அண்ணாமலை, "தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்டத் தொடங்கியுள்ளார். ‘முதல்வரின் வழிகாட்டுதலால் பொறுமையாக இருக்கிறோம். நாங்கள் பதுங்கி இருப்பதை பயமாகக் கருதக் கூடாது’ என தொடர்ந்து மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர் பாபு மிரட்டி வருகிறார். மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆதீனங்களை மிரட்டுவது திமுக அழிவுக்கு காரணமாக இருக்கும். சிதம்பரம் கோவில் விவகாரத்திலும் அமைச்சர் சேகர் பாபு தலையிடுகிறார்” என்று கூறினார்.

பால்வளத் துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். ‘நியூட்ரிஷன்’ திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திமுக வளர்ந்துள்ளது. திமுக செய்யும் ஒவ்வொரு ஊழலையும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வைக்கப்போகிறோம்.

ஜிஎஸ்டி-யில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, எங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைத் தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரதமர் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.9 ஆயிரத்து 602 கோடியை நாங்கள் கொடுத்துவிட்டோம் என்று மேடையிலேயே பொதுமக்கள் முன்பு கூறிவிட்டார்.

புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை பாஜக கண்டிப்பாகத் திணிக்காது. அமைச்சர் பொன்முடி விருப்பம் உள்ளவர்கள் இந்தியைத் தேர்வு செய்து படிக்கலாம் என்று கூறி வருகிறார்.
புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ அதை அப்படியே கையில் எடுத்துக்கொண்டுதான் தமிழகத்தின் கல்விக் கொள்கை என்று கூறி வருகின்றனர். இங்கு உள்ள அமைச்சர்கள் அனைவருமே தமிழகத்தைத் தாண்டி எங்குமே செல்ல மாட்டார்கள்.

கச்சத்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும். பாஜக கச்சத்தீவை மீட்கும். 18 கோடி தொண்டர்கள் பாஜகவில் உள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி பாஜக தான். 2024-ல் கண்டிப்பாக பாஜகவின் எம்.பி தான் திருச்சியில் இருப்பார்" என்றார்.

இதற்கிடையே, இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டவர்கள் மீது விதிகளை மீறியதாக போலீஸார் இன்று காலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in