‘தேரை இழுத்து தெருவில் விட்ட திமுக’ - அண்ணாமலை காட்டம்

‘தேரை இழுத்து தெருவில் விட்ட திமுக’ - அண்ணாமலை காட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயிலில் அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடித்து தேர் இழுக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. கிறிஸ்தவரான மனோதங்கராஜ் தேரை இழுக்கக் கூடாது என பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினர். இது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில் இதுகுறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

வேளிமலை குமாரசுவாமி கோயில் தேரோட்டத்திற்காக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் நேற்று வந்தனர். இதில் மனோ தங்கராஜ் கிறிஸ்தவர் என்பதால் அவர் வடம்பிடிக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. திமுகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் திரண்டநிலையில் அனிதா ராதாகிருஷ்ணனே காவித்துண்டைக் கட்டிக்கொண்டு தான் வடம் பிடித்தார்!

இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆளும் திமுக அரசு மீண்டும் மீண்டும் இறை நம்பிக்கையாளர்களின் பெருமை, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைச் சோதித்துக்கொண்டே இருக்கிறது. குமரி மாவட்டம், குமாரகோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு வைகாசித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறையின் சட்டத்திற்கும், ஆகம விதிகளுக்கும் மாறாக இறை நம்பிக்கையில்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் உள்ளிட்ட திமுகவினர் தேர் வடம்பிடித்து தொடங்கிவைக்க வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பக்தர்கள் எதிர்ப்பை மீறி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களை மிரட்டி, பக்தர்களை விரட்டியதோடு மட்டுமல்லாது சீருடை அணியாத போலீஸாரைப் பயன்படுத்தி தேரை இழுத்த திமுகவினர் இரு தேர்களையும் இழுத்து தெருவில் விட்டுச் சென்றுவிட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாகப் போராடிய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதச்சார்பின்மை எனும் பெயரில் ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவினருக்கு எதிராகவும் இருப்பது ஆட்சிக்கு அழகல்ல’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in