‘முன்பு 2ஜி... இப்போது ஜி ஸ்கொயர்’ - அண்ணாமலை அதிரடி குற்றச்சாட்டு

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலை ஜூன் 5-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தான் அறிவித்திருந்தபடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து திமுக அரசு குறித்த சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கர்ப்பிணிகளுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பில் தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்யவே தமிழக அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் பின்னர், இந்த முடிவு மாற்றப்பட்டது.

அதற்குக் காரணம் திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம், அண்ணாநகர் கார்த்தி ஆகியோர்தான். அவர்கள் கொள்முதல் குழுவில் இருந்த உறுப்பினர்களை மிரட்டி, ஆவின் பொருளுக்கு பதிலாக தனியார் பொருளைச் சேர்க்கச் செய்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். ஆவினைக் காட்டிலும் தரம் குறைவான தனியார் நிறுவன டெண்டரை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல அயன் டானிக்கும் பல மடங்கு விலை அதிகம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது” என்றார்.

மேலும், “இந்தப் பொருட்களை வழங்குவது பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிய அதே நிறுவனம்தான். அந்த நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். சண்முகசுந்தரம், அண்ணாநகர் கார்த்தி ஆகியோர் அரசின் நிர்வாகத்தில் தாக்கம் ஏற்படுத்தி வருகிறார்கள். அரசுத் துறை செயலாளர்களிடம்கூட, ‘முதல்வர் குடும்பத்திலிருந்து பேசுகிறோம்’ என்று சொல்லி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்" என்று அண்ணாமலை கூறினார்.

மேலும் அடுத்ததாக ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது குற்றம்சாட்டி தகவல்களை அவர் கூறினார்.

“ஜி ஸ்கொயர் முன்னேற்றக் கழகமாக தற்போது சிஎம்டிஏ மாறியிருக்கிறது. பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு 8 நாட்களில் டிடிசிபி, மத்திய அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்துள்ளது. அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள 15 திட்டங்களுக்கு அதிகபட்சம் 20 நாட்களுக்குள் அனுமதி கிடைத்துள்ளது. அதன் பின்னால் திமுகவுக்கான விஞ்ஞான முறை இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் என ஒரு அரசாணையை வெளியிடுகின்றனர். எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர் நிறுவனம் அப்ரூவலுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனரோ அதற்கு ஒருமணி நேரம் முன்னர் மட்டுமே இந்த லிங்க் ஓப்பன் ஆகும். அவர்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர் ஒரு மணி நேரத்தில் இந்த லிங்க் இயங்காது. வேறு நிறுவனங்களோ, வேறு யாருமோ இதில் விண்ணப்பிக்க முடியாது. ஜி ஸ்கொயருக்கு மட்டுமே இந்த ஆன்லைன் லிங்க் இயங்குகிறது. அமைச்சர் முத்துசாமி இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பெயர் தற்போது வெளியே தெரியவந்ததால் தற்போது மேலும் 6 புதிய நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர். இதில் முதல்வர் மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை, கார்த்தி ஆகியோர் தலைமை இயக்குநர்களாக உள்ளனர். 2ஜி-யால் முன்பு முடிவுக்கு வந்தது திமுக ஆட்சி. இப்போது ஜி ஸ்கொயரால் என்ன நடக்கப் போகிறதோ என்று பார்க்கலாம்” என அண்ணாமலை தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதலமைச்சர் பதில் கூற வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in