தமிழகத்தில் மதக்கலவரம் நடத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது: எம்.எச்.ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

அண்மைக் காலமாக பாஜக தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைத்து மதக் கலவரங்களை நடத்தி அரசியல் ஆதாயம் தேடிட தொடர்ந்து முயன்று வருகிறது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சமூகநீதியின் நிலைக்களமான தமிழ்நாட்டில், பாஜகவின் சனாதனக் கொள்கையை நுழைத்துவிட பெரும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ்ஸின் முழுநேர ஊழியர் போல செயல்படுவதும், சனாதனக் கொள்கையையும், அதை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையையும் பகிரங்கமாக ஆதரித்து பல கூட்டங்களிலும் பேசி வருகிறார். நெடுங்கால சிறைவாசிகள் விடுதலை குறித்த கோப்புகளைக் கிடப்பில் போடும் ஆளுநர், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வளர்ப்பதற்கு அதிக சுறுசுறுப்பைக் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் பதவி பெறுவதற்கும், காவல்துறை பாதுகாப்பு பெறுவதற்கும், பிரபலமாவதற்கும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும் தங்கள் இடங்கள் மீதும் வாகனங்கள் மீதும் தாங்களே குண்டுவீசி பலமுறை சிக்கிக்கொண்டு அம்பலமானவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 26.9.2022 தேதியிட்ட முரசொலி நாளிதழ் இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்திருப்பது பல சந்தேகங்களை உருவாக்குகிறது. அண்மைக் காலமாக பாஜக தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து மதக் கலவரங்களை நடத்தி அரசியல் ஆதாயம் தேடிட தொடர்ந்து முயன்று வருகிறது" என்று கூறியுள்ளார்.

மேலும்," பாஜக தலைவராக இருந்த எல்.முருகனின் வேல் யாத்திரை முதல் இப்போதைய தலைவர் அண்ணாமலை நடத்திவரும் அருவருப்பு அரசியல் வரை யாவுமே தமிழ்நாட்டில் அமைதியைக் காவுகொள்ளும் நோக்கிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று கோவையில் காவல்துறையினர் உட்பட அனைவரையும் மிரட்டும் வகையில் அண்ணாமலை ஆற்றிய உரையும் இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்குக் கிடைத்துள்ள அனுமதி இவர்களுக்கு கலவர அரசியலில் மேலும் நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ்சின் தமிழக வடிவமான இந்து முன்னணி மூலம் இதுவரை நடத்தப்பட்ட ஊர்வலங்களில் பெரும்பான்மையானவை கலவர நோக்குடன் நடத்தப்பட்டவையே ஆகும். இப்போது ஆர்எஸ்எஸ் நேரடியாகவே பேரணிகளை நடத்த அனுமதி பெற்றுள்ள சூழல் மிகவும் கவலைக்குரியதாகும்.

முஸ்லிம்களிடையே பீதியை விளைவிக்கும் முயற்சிகள் ஒன்றிய பாஜக அரசாலும், தமிழக பாஜகவாலும், சங்பரிவார கும்பலாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு பன்மடங்கு விழிப்போடும் கவனத்தோடும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு பாசிஸ்டுகளை ஒடுக்க வேண்டும்.

சமூக நல்லிணக்கம், சமய நல்லிணக்கம் தழைத்தோங்கும் பூமியான தமிழ்நாட்டின் அமைதியைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் தீய செயல்களில் ஈடுபடும் உண்மைக் குற்றவாளிகளை சரியாக புலனாய்வு செய்து கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பாசிஸ்டுகளால் எவ்வளவு மோசமாக உணர்வுகள் தூண்டப்பட்டாலும் பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அதற்கு இரையாகிவிடக் கூடாது. அமைதியோடும், அதிஉறுதியோடும், அச்சமற்றும் நின்று, ஆரிய சதிகளை முறியடித்திட சாதி மத பேதமற்று திராவிடத் தமிழர்கள் ஓரணியில் நின்றிட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in