‘பாஜக சாதி மற்றும் மத அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கிறது’ - அமெரிக்காவில் ராகுல் காந்தி ஆவேசம்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி ‘பாஜக சாதி மற்றும் மத அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கிறது’ - அமெரிக்காவில் ராகுல் காந்தி ஆவேசம்
Updated on
1 min read

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் மூன்று நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்திக்க உள்ளார்.

சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,"பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்துவதற்கு மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது. பாஜக மக்களை அச்சுறுத்துகிறது மற்றும் அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துகிறது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. யாத்திரையின் தாக்கம் அதிகரித்தது. 'இந்தியாவோடு இணையுங்கள்' என்ற எண்ணம் அனைவரின் இதயத்திலும் இருப்பதால் இது நடந்தது. பாரத் ஜோடோ யாத்திரை ஏன் தொடங்கியது என்றால், மக்களுடன் தொடர்பு கொள்ள தேவையான அனைத்து கருவிகளும் பாஜக-ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருந்தன" என்றார்

மேலும், “பாரத் ஜோடோ யாத்திரை பாசம், மரியாதை மற்றும் பணிவு ஆகியவற்றின் உணர்வைக் கொண்டிருந்தது. வரலாற்றைப் படித்தால், குருநானக் தேவ், குரு பசவண்ணா, நாராயண குரு உள்ளிட்ட அனைத்து ஆன்மீகத் தலைவர்களும் இதே வழியில் தேசத்தை ஒன்றிணைத்தனர்" என்றார். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 3,000 கிமீ தூரம் நடந்து ஜனவரி 30ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவு செய்தார்.

சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “ இந்தியாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும். அதுதான் சமூகத்தின் எக்ஸ்ரே போல இருக்கும். மேலும் இவை சாதி பாகுபாடுகளின் அளவை வெளிப்படுத்தும். பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் சாசனத்தை தாக்கி வருகிறது. அவர்கள் சாதி மற்றும் மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்” என குற்றம்சாட்டினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஜூன் மாதம் அமெரிக்கா வருகிறார். இந்த சூழலில்தான் ராகுல் காந்தி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ஆறு நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது இந்திய அமெரிக்கர்களுடன் பேசவுள்ளார். மேலும் அவர் வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகளையும் சந்திக்கிறார். அவர் தனது பயணத்தை நியூயார்க்கில் ஜூன் 4 ம் தேதி ஜாவிட்ஸ் மையத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்துடன் முடிக்க உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in