அண்ணா(மலை) அட்டாக்; விரட்டும் பாஜக... விலகுமா அதிமுக?

அண்ணாமலை
அண்ணாமலை

வழக்கம்போல் தனது சர்ச்சைக் கருத்தின் மூலம் அதிமுகவினரை ஆத்திரப்பட வைத்திருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்தமுறை டோஸ் கொஞ்சம் அதிகமாகி பாஜகவுடனான உறவு முறிந்துவிட்டது என அதிமுக அறிவிக்கும் அளவுக்கு முற்றி இருக்கிறது பஞ்சாயத்து.

அண்ணாமலையின் பேச்சை தமிழக பாஜகவினர் கொண்டாடுகிறார்கள். “அவர் பேசுவது கொஞ்சம்கூட சரியில்லை; அவர் ஒரு கத்துக்குட்டி” என்கிறார்கள் அதிமுகவினர். அதேசமயம் அண்ணாமலையின் பேச்சுக்கு பின்னால் சில பல ராஜதந்திர வியூகங்களும் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அண்ணாமலை எப்போதாவது ஒருமுறை இப்படி பேசுகிறார் என்றால் அறியாமையால் பேசிவிட்டார், அல்லது விளைவுகள் குறித்து ஆராயாமல் பேசிவிட்டார் எனலாம். ஆனால், அவர்  தேவையான நேரத்தில் திட்டமிட்டு இவ்வாறு பேசுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதிமுக தன்னை வலுவான கட்சி என்று கூறும்போதெல்லாம் அண்ணாமலை இப்படியான சர்ச்சைக் கருத்துக்களைப் பேசிவருகிறார்.  தற்போது அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்த அடிமறைவதற்குள் அண்ணாமலை இப்படி பேசியிருக்கிறார் என்பதை உற்றுக் கவனிக்க வேண்டி இருக்கிறது. 

அது ஏன்? தாங்கள்தான் வலுவான கட்சி, கூட்டணியில் சீட் பங்கீட்டை நாங்கள் தான் முடிவுசெய்வோம் என்று டெல்லியில் உறுதிபடக் கூறிவிட்டு வந்திருக்கிறார் ஈபிஎஸ். தன்னை சந்தித்த ஈபிஎஸ்ஸிடம் மக்களவைத் தேர்தலில் 15 முதல் 20 இடங்களை பாஜகவுக்கு ஒதுக்கவேண்டும் என்று அமித் ஷா கேட்டதாகச் சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக, நீலகிரி, கோவை, கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய தொகுதிகளைக் கட்டாயமாக தங்களுக்கு தரவேண்டும் என்று அமித் ஷா கேட்டதாகவும் அதற்கு ஈபிஎஸ் சம்மதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

இத்தகைய நிர்பந்தத்தை எதிர்பார்க்காத ஈபிஎஸ், அமித் ஷாவுக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் சென்னை திரும்பிவிட்டதாகச் சொல்கிறார்கள். தங்கள் நிபந்தனைக்கு ஈபிஎஸ் ஒத்துக்கொள்ளாமல் சென்றதை அடுத்துத்தான் அவரை வழிக்கு கொண்டு வரும் வேலையை அண்ணாமலையை வைத்து பாஜக தொடங்கியுள்ளது என்கிறார்கள்.

இந்த திட்டப்படியே அதிமுகவை சீண்டும் விதமாக அண்ணாமலை பேசியிருக்கிறார்; இன்னமும் பேசி வருகிறார். கூட்டணியே முறிந்துபோகும் நிலைக்கு வந்துவிட்ட பிறகாவது தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பார் என்று பார்த்தால், “என் நேர்மையைக் கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் சும்மாவிட மாட்டேன். சி.வி.சண்முகம் 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார்... 6 மணிக்கு பிறகு ஒரு மாதிரி பேசுவார். அதையெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய பாணி இப்படித்தான் இருக்கும். இங்கேயும் லஞ்ச ஒழிப்புத் துறை இருக்கு. பாதுகாப்பு எல்லாத்துக்கும் தேவைதானே... எல்லாத்துக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை மேல பயம் இருக்கு” என்று என்று பகிரங்கமாகவே அதிமுகவை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார் அண்ணாமலை. 

அதேசமயம், “எல்லோருக்கும் கூட்டணி தேவைப்படுகிறது, கூட்டணி வைக்காமல் போட்டியிடும் அளவுக்கு யாரும் இங்கு பலசாலி இல்லை. கூட்டணி வேண்டாம் என்று அவர்கள்  எப்படி சொல்ல முடியும்?” என்று அதிமுகவை எச்சரிக்கவும் செய்கிறார் அண்ணாமலை. ஆக தங்களுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும், தாங்கள் கேட்கும் தொகுதிகளைக் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவை அண்ணாமலை மூலமாக மிரட்டுகிறது பாஜக.  

உள்ளுக்குள் இப்படியான திட்டம் இல்லை என்றால், கூட்டணிக்கு குந்தகம் விளைவிப்பதாகச் சொல்லி இந்நேரம் அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து தூக்கி இருக்கும் பாஜக. அப்படிச் செய்யாமல், கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்தாலும், தாங்கள் அப்படி அறிவிக்காத வரையில் அது செல்லாது என்பதை பாஜக வெளிப்படையாகவே காட்டிவருகிறது.

பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்த அன்று இரவு தான்,  "அதிமுக - பாஜக கூட்டணி பாறை போல உறுதியுடன் இருக்கிறது" என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிவு செய்தார்.  தமிழ்நாட்டில் இப்படி ஒரு பிரச்சினை நடந்துகொண்டிருக்கையில், பிரதமர் மோடியை அதிமுக எம்பி-யான தம்பிதுரை வெகுவாக புகழ்ந்து பேசுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, அதிமுக பாஜக கூட்டணி முறிவதற்கு வாய்ப்பேயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 

கேட்கும் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்பது உட்பட தங்கள் நிபந்தனைகளுக்கு அதிமுக ஓப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பாஜக இப்படி எல்லாம் நடந்துகொள்கிறது. அதேசமயம், ‘கூட்டணி இல்லை’ என்று அதிமுக அவசரமாக ஏன் சொல்ல வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். கூட்டணி இல்லை என்பதை தன் வாயால் சொல்லாமல் ஜெயக்குமாரைச் சொல்லவைத்து அண்ணாமலைக்கு எதிராக கடுமையாக பேசவைத்ததன் பின்னணியில் ஈபிஎஸ்ஸுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்கிறார்கள். 

கூட்டணி இல்லை என்று அறிவித்த ஜெயக்குமார்
கூட்டணி இல்லை என்று அறிவித்த ஜெயக்குமார்

பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் தன்னை விடமாட்டார்கள் என்பது ஈபிஎஸ்ஸுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், பாஜகவுக்கு அதிகபட்சம் ஏழு தொகுதிகளையே தரவேண்டும். அதிமுக அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிட வேண்டும், பாஜகவைவிட கூடுதலான தொகுதிகளை பாமக போன்ற வலுவான வாக்கு வங்கி உள்ள கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஈபிஎஸ்ஸின் எண்ணம். 

தனது எண்ணத்துக்கு மாறாக அமித் ஷா தங்களுக்கு 20 தொகுதிகள் வரை வேண்டும் என்று கேட்டதால் அதிர்ச்சியடைந்த ஈபிஎஸ், அண்ணாமலையின் பேச்சை கருவியாக வைத்து, ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என்று அறிவித்து, அதன்மூலம் அண்ணாமலைக்கும், பாஜக தலைமைக்கும் செக் வைத்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தொடரவேண்டுமானால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையையும் அதிமுக இப்போது அழுத்தமாக முன்வைக்கிறது.

கூட்டணி இல்லை என்று அறிவித்ததுமே பாஜக மேலிடம் தங்களைச் சமாதானப்படுத்தும் என்று ஈபிஎஸ் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு மாறாக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுகவையும் அதன் தலைவர்களையும் பாஜகவினர் மோசமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பாஜகவின்  அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ’வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்து சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? அப்படி யாரிடமும் குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வராதவர் எங்கள் தலைவர் அண்ணாமலை. அது தான் எங்கள் தலைவருக்கான பெருமைமிகு தகுதி’ என பதிவிட்டுள்ளார். 

இன்னொரு பதிவில், ’கோடநாடு கொலை, கொள்ளை போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பதுதான், ஒரு கட்சித் தலைவருக்கான தகுதி என அதிமுகவின் ஜெயக்குமார் நினைத்தால், அப்படிப்பட்ட தகுதி எங்கள் தலைவருக்கு இல்லைதான்’ என்று சீண்டுகிறார் ரெட்டி. ‘இனி பேச்சு இல்லை வீச்சுதான்’ என்று  பாஜகவினர் போஸ்டர் போடுகிறார்கள். பதிலுக்கு அதிமுகவினரும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். 

அதிமுக கூட்டணியில் இல்லாவிட்டால் தமிழகத்தில் தங்களுக்கு வேலை இல்லை என்பது பாஜகவினருக்கும் நன்கு தெரியும். ஆனாலும், அதிமுகவை தங்கள் வழிக்கு கொண்டுவர இப்படி ஆளாளுக்கு  மிரட்டுகிறார்கள். அதன் விளைவாகவே, கூட்டணி இல்லை என்று அறிவித்த இரண்டாவது நாளே, ‘கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது’ என்று அதிமுகவினருக்கு ஈபிஎஸ் உத்தரவு பிறப்பித்ததாகவும் சொல்கிறார்கள். 

இந்த அரசியல் குறித்து பாஜக மாநிலத் துணைத்தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமியிடம் பேசினோம். “இரண்டு தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டது இதுதான் என்று ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுகின்றன. அதைவைத்துக் கொண்டு, அங்கு அப்படி பேசினார்கள்...  அதனால்தான் அதிமுக பாஜக மோதல் என்று சொல்வது சரியல்ல. இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள், சண்டைகள் பலமுறை ஏற்பட்டாலும் அடுத்து சமாதானமும் இருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. அதனால் இந்த கூட்டணி உடையவே உடையாது.  

வி.பி துரைசாமி
வி.பி துரைசாமி

இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று புரிந்துகொண்ட கட்சிகள்; ஒன்றையொன்று அனுசரித்துச் செல்லக்கூடியவை.  மக்களுக்காக உழைப்பவை. இந்த கூட்டணி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள, மக்களுக்கான கூட்டணி. தலைவர் அண்ணாமலையைப் பொறுத்தவரை அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை அப்படியே பின்பற்றுகிறவர். அதிமுகவில் சிலர் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் தற்போது பிரச்சினை. ஆனாலும் இதுவும் சரிசெய்யப்பட்டுவிடும். தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சியை விரட்டுவதில் இருகட்சிகளும் இணைந்து களம் கண்டு வெற்றி பெறுவது உறுதி” என்றார் அவர்.  

பாஜகவுடன் கூட்டணியே வேண்டாம் என அதிமுக வெளிப்படையாக அறிவித்துவிட்டாலும் அவர்களால் பாஜகவைவிட்டு அத்தனை எளிதில் விலகிவிடமுடியாது என்பதே நிதர்சனம். பாஜக தயவு அதிமுகவுக்கு இல்லை என்று தெரிந்தால் அதிமுக தலைவர்களை திமுக அரசு ஒருகை பார்த்துவிடும். இந்த சிக்கல் இருப்பதாலேயே பாஜக என்ற கேடயத்தை ஒரேயடியாக விட்டுவிலக முடியாமல் நிற்கிறது அதிமுக. இந்த சூட்சுமம் தெரிந்தே பாஜகவும் அண்ணாமலை என்ற ஆயுதம் மூலமாக அதிமுகவை வழிக்குக் கொண்டுவரும் வேலைகளை வாகாய் செய்கிறது. இதில் ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு காலம் தான் பதில்சொல்ல வேண்டும்!

டெய்ல் பீஸ்: பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த அதிமுக, அடுத்த திட்டமாக கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலரை டெல்லிக்கு அனுப்பி, அண்ணாமலையின் பேச்சுக்கு நியாயம் கேட்டது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலையும் பாஜக தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்த அதிமுக தலைகள், “இதற்கு மேலும் அண்ணாமலையை தலைவராக வைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்வது சாத்தியப்படாது” என தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். அதற்கு, “கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு வந்து எதற்காக இதையெல்லாம் பேசவேண்டும்?” என நட்டா சற்று சூடாகவே திருப்பிக் கேட்டதாக தமிழக பாஜக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in