
லாலு பிரசாத் யாதவை கண்டு பாஜக பயப்படுவதாகவும், அதனால்தான் மத்திய அமைப்புகள் அவரைப் பின்தொடர்வதாகவும் பிஹார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி மூத்த தலைவருமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
ரயில்வே நில மோசடி வழக்கில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி உள்ளிட்ட 14 பேருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராப்ரி தேவி, "எங்கேயும் பயந்து ஓட மாட்டோம் . கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். பிஹாரில் லாலு பிரசாத் யாதவைக் கண்டு பாஜக பயப்படுகிறது" என்று கூறினார்.
ரயில்வே நில மோசடி வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, அவர் மார்ச் 15ம் தேதிக்கு சம்மன் அனுப்பினார். ரயில்வே நில மோசடியில் பிஹார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பார்தி மற்றும் 13 பேர் மீது, கடந்த ஆண்டு அக்டோபரில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.