
செங்கோலை ஏந்துகிறோம் என்ற பெயரில் பாஜக நடத்துகிற நாடகம், அரசியல் சூதாட்டம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய பாராளுமன்றம் திறக்கப்படுவதைக் கண்டிக்கும் விதமாக சென்னை அசோக்நகரில் உள்ள அம்பேத்கர் திடலில், கருப்பு உடை அணிந்து திருமாவளவன் கருப்புக் கொடியை ஏற்றினார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’தமிழ்நாட்டில் பாஜக என்ன சித்து வேலை செய்தாலும், எத்தனை அச்சுறுத்தல்களை செய்தாலும் இங்கு அவர்களுக்கு இடம் இல்லை என்பதை 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் நிரூபணம் செய்வார்கள்.
செங்கோலை ஏந்துகிறோம் என்ற பெயரில் நடத்துகிற நாடகம், அரசியல் சூதாட்டம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளோம். ஆதீனங்களை அழைத்து சிறப்பிப்பது தமிழ்நாட்டு மக்களைக் குறி வைத்து காய்களை நகர்த்தி சங்பரிவார் அமைப்புகள் செய்கிற சூது, ஏமாற்று வேலை’’ என்றார்.