மோடி அரசினை அப்படியே பின்பற்றும் திமுகதான் பாஜகவின் உண்மையான ‘பி’ டீம் – சீமான் சீற்றம்

சீமான்
சீமான்மோடி அரசினை அப்படியே பின்பற்றும் திமுகதான் பாஜகவின் உண்மையான ‘பி’ டீம் – சீமான் சீற்றம்

சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமான போக்குவரத்துக் கழகம், கடந்த 50 ஆண்டுகளாக 20 ஆயிரம் பேருந்துகளுடன் ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடர்ந்து இயங்கி வருகின்றது. போதிய வருமானம் இல்லாத குக்கிராமங்களிலும், இலாப – நட்டத்தை கணக்கில் கொள்ளாமல் மக்கள் சேவையை மட்டுமே முதன்மையானதாக கொண்டு இயங்கிவரும் அரசுப் பேருந்துகள் கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஆனால், அரைநூற்றாண்டு காலமாக அடுத்தடுத்து தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் கட்டுக்கடங்காத ஊழல் காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நட்டத்தில் இயங்குவதோடு, பணியாளர்களுக்கு உரிய ஊதியம் கூடக் கொடுக்க முடியாத அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. தாங்கமுடியாத கடன்சுமை காரணமாகப் போக்குவரத்து சேவையில் தனியாரை அனுமதிக்க, அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக நிதியமைச்சர், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தபோதே அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்தது. போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் அரசின் அம்முடிவிற்குத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதனையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல், முதற்கட்டமாக சென்னையில் 500 பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்க தற்போது முடிவு செய்திருப்பது பொதுமக்களிடத்திலும், போக்குவரத்து ஊழியர்களிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறையைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவை இலாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்பதால் பயணிகள் அதிகம் இல்லாத சிறிய கிராமங்களுக்குப் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் பேராபத்து ஏற்படக்கூடும். மேலும், விழாக்காலங்களில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவதுபோல், தனியார் பேருந்து முதலாளிகள் தங்கள் விருப்பம்போல் பேருந்து கட்டணத்தை உயர்த்திக்கொள்ளவும் அரசின் இம்முடிவு வழியேற்படுத்துவதோடு, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களின் பணிப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். அதுமட்டுமின்றி, மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தற்போது வழங்கப்பெறும் கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட வாய்ப்பு ஏற்படும்.

மோடி தலைமையிலான பாஜக அரசு, வங்கி, காப்பீடு, வானூர்தி, தொடர்வண்டி உள்ளிட்ட அனைத்து மக்கள் சேவை பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. சொந்தமாக ஒரு வானூர்தி கூட இல்லாத நிலையில், குடிமக்களிடம் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து வானூர்தி நிலையங்களை அமைக்கிறது பாஜக அரசு. பாஜகவையும், அதன் கொள்கைகளையும் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, கொடுங்கோன்மை பாஜக அரசு செய்வதைப்போலவே, சென்னை மாநகருக்குட்பட்ட பேருந்துநிலையங்களை பல நூறுகோடிகள் செலவில் நவீன மயமாக்கப்போவதாக அறிவித்துவிட்டு, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கிறது. மோடி அரசினை அப்படியே பின்பற்றும் திமுகதான், பாஜகவின் உண்மையான ‘பி’ டீம் என்பது மீண்டும் ஒருமுறை இதன் மூலம் உறுதிப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதற்கு பெயர் திராவிட மாடலா? அல்லது ஆரிய மாடலா? என்ற கேள்விக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருக்கும்போது நட்டத்தில் இயங்கும் பொதுநிறுவனங்கள், தனியாரிடம் சென்றவுடன் எப்படி இலாபத்தில் இயங்குகின்றன? அரசால் செய்ய முடியாத ஒன்றைத் தனியார் நிர்வாகம் சிறப்பாகச் செய்கிறது என்றால் பல இலட்சம் கோடி கடனுள்ள அரசையே ஏன் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது? என்ற மக்களின் ஐயம் மிகமிக நியாயமானதே.

ஆகவே, அரசுப் பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைத்து, அதில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து, இலாபத்தில் இயங்கச் செய்ய உரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், தங்களின் பணிப்பாதுகாப்பிற்காகவும் ‘அரசுப் போக்குவரத்து கழகத்தை’ மெல்ல மெல்ல தனியாருக்குத் தாரைவார்க்கும் திமுக அரசின் முடிவை எதிர்த்து போக்குவரத்து சங்கங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை தெரிவிப்பதோடு, போராட்டம் வெல்லும்வரை துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in