அசுர வெற்றி: அடுத்து, மாநிலங்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல்!

பரபரப்பாகும் பாஜக முகாம்
அசுர வெற்றி: அடுத்து, மாநிலங்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல்!

ஐந்து மாநிலத் தேர்தலில் அசுர வெற்றியைப் பெற்று அரசியல் களத்தில் மேலும் வலுவான இடத்தை அடைந்திருக்கும் பாஜக, அடுத்ததாக மார்ச் 31-ல் நடக்கவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலிலும், ஜூலையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் கவனம் குவிக்கத் தொடங்கியிருக்கிறது.

சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகள் மூலம், மாநிலங்களவை எம்.பி-க்களை அதிகரிக்கும் வாய்ப்பு பாஜகவுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், உத்தர பிரதேசத்தில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் அபார வெற்றியால் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும் அக்கட்சியின் பங்கு முதன்மையானதாகியிருக்கிறது.

பாஜகவின் பலம்

இந்தியாவின் குடியரசுத் தலைவரை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 776 எம்.பி-க்கள் மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் 4,120 எம்எல்ஏ-க்களைக் கொண்ட வாக்காளர் குழு தேர்வு செய்யும். வாக்காளர் குழுவின் மொத்த வாக்குகள் 10,98,903 ஆகும். அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை பாஜக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள்தான்.

ஒவ்வொரு எம்.பி-யின் வாக்கின் மதிப்பும் 708 ஆகும். எம்எல்ஏக்களைப் பொறுத்தவரை, மாநிலத்துக்கு மாநிலம் அவர்களின் வாக்குகளின் மதிப்பு வேறுபடும். உத்தர பிரதேச எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கின் மதிப்பு தலா 208 ஆகும். உத்தர பிரதேசத்தில் 270-க்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தீர்மானிக்கப்போவது அக்கட்சிதான்.

வெங்கய்யா நாயுடுவுக்கு வாய்ப்பா?

குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் இடத்தை, தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நிரப்புவார் எனும் ஊகங்கள் எழுந்திருக்கின்றன. ராம்நாத் கோவிந்தே மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. எனினும் இது குறித்து பாஜக தலைமை இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் மட்டும்தான் இரண்டு முறை அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்குப் பின்னர் யாரும் இரண்டாவது முறை குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு வந்ததில்லை.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்குப் பலம் என்றபோதிலும், தோழமைக் கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவையும் பாஜக நாடும் எனத் தெரிகிறது.

எதிர்க்கட்சி வேட்பாளர் யார்?

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, அனைத்துக் கட்சிகளும் இணைந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்யும். ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கிடைத்த படுதோல்வியால், குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் அக்கட்சிக்கு முதன்மைப் பொறுப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். மாறாக, திமுக, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற மாநிலக் கட்சிகள் இணைந்து தங்கள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிகாரபூர்வமாக யார் பெயரையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கவில்லை.

அதேசமயம், பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டால் பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பரிசீலிக்கலாம் என மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.