சுவர் விளம்பரத்துக்காக அடித்துக் கொண்ட திமுக- பாஜகவினர்

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்

சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட தகராறில் பாஜகவினரை தாக்கிய திமுகவினர் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாரதிய ஜனதா கட்சியினர் இன்று கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்படும் பாஜகவினர்
கைது செய்யப்படும் பாஜகவினர்

கரூர் மாவட்ட பாஜக சார்பில் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து கரூர் மாநகர பகுதியில் பாஜகவினர் சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர். இந்நிலையில் கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்புள்ள சுவற்றில் அவர்கள் விளம்பரம் செய்வதற்கு முயன்றதாகவும், ஆனால் கரூர் நகர திமுகவினர், அந்த சுவற்றில் தமிழக அரசின் சாதனைகளை விளம்பரமாக எழுதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த கரூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆறுமுகம் தலைமையிலான பாஜகவினர் கடந்த 14-ம் தேதியன்று திமுகவினரிடம் தட்டிக் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஆறுமுகம் மற்றும் ஐடி விங் மாவட்ட தலைவர் அருண் ஆகிய இருவரையும் கரூர் மாநகராட்சி திமுக உறுப்பினர் எஸ்.பி.கனகராஜ் தலைமையிலான திமுகவினர் சட்டையை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு கலைந்து போகச் செய்தனர். அப்போதும் காவல்துறையினரின் எதிரிலேயே பாஜகவினரை திமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்யக்கோரி முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையினர் உறுதியளித்த வண்ணம் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி கரூர்- நாமக்கல் புறவழிச்சாலையில் எழுதப்பட்டிருந்த திமுக விளம்பரத்தை அழிப்பதற்காக பாஜகவினர் அங்கு சென்றனர். அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்திய போலீஸார் கைது செய்தனர். இந்த செய்தியறிந்து அங்கு கூடிய ஏராளமான பாஜகவினர், கரூர்- நாமக்கல் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in