
நிதிநிலை அறிக்கை வாசிக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தமிழை, பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா பகடி செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்பித்து வருகிறார். பல்வேறு தளங்கள் வாயிலாகவும் நிதியமைச்சரின் உரை நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இதிலிருந்து, பழனிவேல் தியாகராஜனின் தமிழ் வாசிப்பை பாஜகவினர் கிண்டலடித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் படித்து அங்கேயே பணிபுரிந்தவரான பழனிவேல் தியாகராஜன், தமிழில் சரளமாகவும், திடமாகவும் பேசக்கூடியவர். புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளுடன் அவரது நறுக் பேச்சு இந்திய அளவில் பிரபலமானது. ஆனால் தமிழ் வாசிப்பில் சற்றுத் தடுமாறுகிறார். இதுவே கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
நிதியமைச்சரின் இந்த தமிழ் தடுமாற்றத்தை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா டிவிட்டரில் ‘சுக்குமி, லகுதி, ப்பிலி’ என பகடி செய்துள்ளார். இதையே இதர பாஜகவினர் ’சாப்பா டுபோ டப்ப டும்’ என்பது போன்ற வாக்கியங்களால் வழிமொழிந்து வருகின்றனர்.
இதன் ஊடாக நுழைந்த திமுகவினர் எச்.ராஜாவின் ‘சுக்கு மிலகு திப்பிலி’ என்பதை ‘ஐயா அது, சுக்கு மிளகு திப்பிலி. போய் ஒழுங்கா தமிழ் மொழியை படித்து வாங்க’ என்று பதிலுக்கு கிண்டலடித்து வருகின்றனர்.