
மக்களவையில் அதானியுடன் பிரதமர் மோடி இருக்கும் படத்தைக் காட்டி உக்கிரமாக பேசிய ராகுல் காந்திக்கு பதிலடி தரும் வகையில், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, கவுதம் அதானியுடன் இருக்கும் படங்களை பாஜக கசிய விட்டுள்ளது.
அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட தகவல்களை அடுத்து, அவரது குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி கண்டன. அதானியின் தனிப்பட்ட சொத்தும் கரைந்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் அதானி குழுமத்துக்கும் இடையிலான தொடர்புகளை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் பேசுபொருளாக்கி வருகின்றன.
பிரதமர் மோடியின் அரவணைப்பு காரணமாகவே, அதானி குழுமத்துக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வணிக ஒப்பந்தங்கள் கிடைத்தன என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதன் உச்சமாக இன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அதானி - மோடி இடையிலான தொடர்பை முன்வைத்து உக்கிரமாக களமாடினார். இதனை பாஜக எதிர்பார்த்திருந்தபோதும், நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடுத்து வரும் தேர்தல் முடிவுகளை பாதிக்குமோ என அஞ்சியது.
எனவே, ராகுல் காந்தியின் பேச்சை திசை திருப்பும் வகையிலும், தொழிலதிபரான கவுதம் அதானி, மோடி உள்ளிட்ட பாஜகவினர் மட்டுமன்றி பல்வேறு கட்சிகளின் அரசியல் பிரபலங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பதற்கான புகைப்பட ஆதாரங்களை பரப்பி வருகிறது. அவற்றில் ஒன்றாக, பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுடன் கவுதம் அதானி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், அதானி - மோடி நெருக்கத்தை, நாட்டு நலனுக்கு எதிரானதாக விமர்சிக்கும் ராகுல் காந்தியின் பேச்சை நீர்க்கவும் பாஜக முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக தோற்றமளிக்கும் அவற்றில், கவுதம் அதானியுடன் ராபர்ட் வதேரா உரையாடுவது, தொழிற்சாலைக்கான இடங்களை பார்வையிடுவது உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாஜக ஐடி செல் இதனை வேகமாக பரப்பி வருகிறது.