அதானி விவகாரத்தில் பாஜக மறைக்கவோ, பயப்படவோ எதுவும் இல்லை: அமித் ஷா திட்டவட்டம்

அமித் ஷா
அமித் ஷாஅதானி விவகாரத்தில் பாஜக மறைக்கவோ, பயப்படவோ எதுவும் இல்லை

அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பெகாசஸ் விவகாரத்திலும் இதேபோன்ற போலி குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்

ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடி, தொழில் அதிபர் கெளதம் அதானிக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டின. இதன் காரணமாக பலமுறை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை பாஜக கடுமையாக மறுத்து வருகின்றன. இந்த நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துள்ளது. மத்திய அமைச்சர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து நான் கருத்து சொல்வது சரியல்ல. ஆனால் இதில் பா.ஜ.கவினருக்கு மறைப்பதற்கும், பயப்படுவதற்கும் ஒன்றுமில்லை. காங்கிரஸ் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் செல்லலாம்”என்று கூறினார்.

மேலும், பெகாசஸ் ஸ்பைவேர் சர்ச்சை வெடித்தபோதும், ​​ காங்கிரஸ் கட்சி இதேபோன்ற குற்றச்சாட்டுகளை மத்திய அரசுக்கு எதிராக கூறியதாக அமித் ஷா சுட்டிக்காட்டினார். “பெகாசஸ் பிரச்சினை எழுப்பப்பட்டபோது, நீதிமன்றத்திற்கு ஆதாரத்துடன் செல்லுங்கள் என்று நான் கூறியிருந்தேன், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களுக்கு சத்தத்தை உருவாக்க மட்டுமே தெரியும். நீதிமன்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று அவர் கூறினார்.

அதானி மற்றும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கருத்துகள் நாடாளுமன்றக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதும், மத்திய அரசு மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தியது. இதுபற்றி அமித் ஷாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாடாளுமன்றத்தில் ஒருவர் கூறிய கருத்துகள் நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. நாடாளுமன்ற நடவடிக்கைகளின் வரலாறு இதைத் தெளிவாகக் காட்டுகிறது. பார்லிமென்ட் என்பது, பார்லிமென்ட் மொழியைப் பயன்படுத்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டு விவாதம் நடத்தும் இடம்" என தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் முன்முயற்சிகளால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு போட்டி இல்லை என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் நாட்டு மக்கள் முழு மனதுடன் நிற்கின்றனர் என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in