மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கின் அரசு வழக்கறிஞரை வேட்பாளராக்கியது பாஜக... மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்!

உஜ்வல் நிகம்
உஜ்வல் நிகம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பை வடக்கு மத்திய மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக உஜ்வல் நிகம் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அரசு வழக்கறிஞராகச் செயல்பட்டவர் ஆவார்.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி) 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிட உள்ளன. பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

உஜ்வல் நிகம்
உஜ்வல் நிகம்

மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக 5 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 20ஆம் தேதி வரை இன்னும் 3 கட்டங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது.

மக்களவை தேர்தலில் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் வடக்கு மும்பையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் வடமத்திய மும்பை தொகுதிக்கு பாஜக வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. இத்தொகுதியில் ஏற்கெனவே எம்.பி.யாக இருக்கும் பூனம் மகாஜனுக்கு வாய்ய்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மும்பை தாக்குதல் வழக்கில் மாநில அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகம் என்பவரை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுகிறார்.

உஜ்வல் நிகம்
உஜ்வல் நிகம்

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் படகு மூலம் வந்து தாக்குதல் நடத்தியபோது பிடிபட்ட அஜ்மல் கசாப் மீதான வழக்கு விசாரணையில் அரசு சார்பாக உஜ்வல் நிகம் தான் ஆஜராகி வாதாடினார். இது தவிர மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு, குல்ஷன் குமார் கொலை வழக்கு, பிரமோத் மகாஜன் கொலை வழக்குகளிலும் அரசு சார்பாக உஜ்வல் நிகம் ஆஜரானார். இது தவிர 1993 மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குககளில் வழக்கறிஞராக இருந்துள்ளார் உஜ்வல் நிகம். 2013 மும்பை கூட்டு பலாத்கார வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் இருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in