தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் ஸ்டிக்கர் படம்: வலுக்கட்டாயமாக ஒட்டும் பாஜகவினர்!

தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் ஸ்டிக்கர் படம்: வலுக்கட்டாயமாக ஒட்டும் பாஜகவினர்!

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படத்தை தமிழக அரசின் விளம்பரத்தில் வலுக்கட்டாயமாக பாஜகவினர் ஒட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறி செயல்பட்டு வரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. 190 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் நடித்துள்ள வீடியோ ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செஸ் போட்டி விளம்பர வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியை பிரதமர் மோடி நாளை சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியில் பிரதமர் மோடியின் படம் இல்லை என்றும் தமிழக அரசு பிரதமரின் படத்தை புறக்கணித்து வருவதாகவும் தமிழக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படத்தை பாஜகவினர் ஓட்டி வருகின்றனர். தமிழக அரசின் அனுமதியில்லாமல் பிரதமர் படத்தை பாஜகவினர் ஓட்டி வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

"செஸ் ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்திடும் வகையில் தமிழக அரசு செய்த விளம்பரங்களில் இந்திய பிரதமரின் புகைப்படத்தைக் கூட போடாத நிலையை மாற்றிடவும், மக்கள் விரோத திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் தவறை உணர்த்தி திருத்திடும் விதமாக தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் தமிழர் பண்பாட்டை நிலைநாட்டிடும் வகையில் செஸ் ஒலிம்பிக் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டினோம்" என்று அதன் நிர்வாகி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in