தென்னிந்தியாவை வட்டமிடும் பாஜக!

நான்கு நியமன எம்பி-க்கள் அறிவிப்பின் பின்னணி என்ன?
தென்னிந்தியாவை வட்டமிடும் பாஜக!

தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, மாநிலங்களவைக்கு நியமன எம்பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கூடவே சேர்ந்து கேரளாவைச் சேர்ந்த தடகள முன்னாள் வீராங்கனை பி.டி. உஷா, ஆந்திராவைச் சேர்ந்த திரைக்கதையாசிரியரும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரையும் நியமன எம்பி-க்களாக பிரதமர் மோடி அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்திருக்கிறார்.

இப்படி ஒரே நேரத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 4 பிரபலமான ஆளுமைகள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தைச் சூடேற்றியிருக்கிறது. இதன்மூலம் தென்னிந்தியாவை நோக்கி தங்களுடைய களத்தை இன்னும் வேகமாக நகர்த்தத் தொடங்கிவிட்டதா பாஜக?

நியமன எம்பி-க்கள் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாதில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும். தென்னிந்தியாதான் பாஜகவின் அடுத்தகட்ட இலக்கு. குறிப்பாக, தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்” என்று கர்ஜித்திருந்தார். அமித் ஷவின் இந்தப் பேச்சும் அதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமன எம்பி-க்கள் பதவியும் ஒரு நேர்க்கோட்டு அரசியலாக மாறியிருக்கிறது.

ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது, ஒருவேளை அந்த மாநிலத்தில் சறுக்கல் ஏற்பட்டால், அங்கு ஏற்படும் இழப்புகளை இன்னொரு மாநிலத்தில் பெறும் வெற்றியின் மூலம் ஈடுகட்டிக்கொள்வது போன்றவை 2014-க்குப் பிறகான பாஜகவின் உத்திகளில் ஒன்று. 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி குறையும் இடங்களைத் துல்லியமாக கணித்த பாஜக, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் பெற்ற புதிய வெற்றியின் மூலம் அதன் விகிதம் குறையாமல் பார்த்துக்கொண்டது. 2024 மக்களவைத் தேர்தல் நடக்கும்போது 10 ஆண்டுகள் ஆட்சியைப் பாஜக நிறைவு செய்திருக்கும். அதனால், இயல்பாக ஏற்படும் சலிப்பு போன்றவற்றால், ஏற்கெனவே பாஜகவுக்கு வாக்களித்தோர் மனநிலை மாறினால் பாஜக வெற்றிக்கு பாதகம் ஏற்படலாம். அதனால், மெஜாரிட்டிக்கான வெற்றி விகிதம் குறையக்கூடும். அப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

இந்தச் சூழலில்தான் அமித் ஷாவின் ‘தென்னிந்தியாதான் பாஜகவின் அடுத்தகட்ட இலக்கு’ என்ற சூளுரை முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் கர்நாடகாவிலும், இறுதியில் தெலங்கானாவிலும் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இவ்விரண்டிலும் கிடைக்கும் வெற்றி 2024-ல் மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க கைகொடுக்கும் என்பது அக்கட்சியின் கணக்கு. இதுவரை கர்நாடகம் தவிர்த்து பெரிதாக பலம் இல்லாத தென்னிந்தியாவிலும் புதிய வெற்றிகளைப் பெறுவதன் மூலம் வட இந்தியாவில் ஏற்படும் சிறு சிறு சறுக்கல்களை சரி செய்துவிடலாம் என்பதும் பாஜகவின் திட்டம். அதன் ஒரு பகுதியாகவே தென்னிந்தியாவை நோக்கி பாஜகவை நகர்த்தும் வேலைகளை பாஜக தலைமை திட்டமிட்டு செய்யத் தொடங்கியிருக்கிறது. அதனாலேயே 18 ஆண்டுகள் கழித்து பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தை ஹைதராபாதில் நடத்த பாஜக தீர்மானித்தது.

ஹைதராபாத் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சும் வாரிசு அரசியலை மையப்படுத்தியே இருந்தது. தென்னிந்தியாவில் ஆட்சியில் இருக்கும் திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளில் உள்ள வாரிசு அரசியலைத்தான் அந்தந்த மாநிலங்களில் பாஜக கடுமையாகப் பேசி வருகிறது. பிரதமர் மோடியும் வாரிசு அரசியல் விமர்சனத்தை முன் வைத்தே ஹைதராபாதில் பேசினார்.

“சப்கா சாத் சப்கா விகாஸ் (அனைவரும் இணைந்து அனைவருக்குமான முன்னேற்றம்)” என்ற பிரதமர் மோடியின் பேச்சு, தென் மாநிலங்களை நோக்கிச் செல்லுங்கள் என்பதை உணர்த்துவதாகவே அமைந்தது. மேலும், புதிய இடங்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ள பாஜக, இதற்காக 144 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் தமிழகத்தில் 8 தொகுதிகளும் புதுச்சேரி உள்பட தென்னிந்திய மாநிலங்களில் உள்ள கணிசமான தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்தத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்களையும் பாஜக நியமித்து வருகிறது. தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு மத்திய அமைச்சர் வி.கே. சிங்கும் புதுச்சேரிக்கு எல்.முருகனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக தென்னிந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்வதையும் பிரதமர் மோடி தொடங்கி விட்டார். தென்னிந்தியாவை மையப்படுத்திய வெற்றியைப் பெற அனைத்துவிதமான முயற்சிகளிலும் பாஜக தலைமை தீர்க்கமாக இறங்கியுள்ளது.

தென்னிந்தியாவை பாஜக இப்படி வட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளையில்தான் காலியாக இருந்த 6 நியமன எம்பி பதவிகளுக்கு 4 பேரை நியமித்து அறிவிப்பு வெளியானது. இதிலுள்ள பெயர்களைப் பார்த்ததும் பலரும் ஆச்சரியமடைந்தனர். இந்தப் பட்டியலில் ஒருவர்கூட வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. நால்வருமே தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆளுமைகள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

நால்வர் பெயரும் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே பிரதமர் மோடி அந்த நால்வருக்கும் அவர்கள் மொழியிலேயே வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டார். ஆக, இந்த நால்வரின் நியமனம் மூலம் தென்னிந்திய மாநிலங்கள் தங்களுக்கு முக்கியம் என்பதை பாஜக சூசகமாகச் சொல்லி இருக்கிறது.

நால்வருமே பெரும் திறமைசாலிகள், சாதனையாளர்கள், தங்கள் துறைகளில் முத்திரைப் பதித்தவர்கள் என்றாலும், அதையெல்லாம் தாண்டி இவர்களின் நியமனம் அரசியல்ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக, தமிழகத்தில் இளையராஜாவின் நியமனம் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. ‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற நூலில் அம்பேத்கரோடு மோடியை ஒப்பிட்டு இளையராஜா எழுதிய அணிந்துரைக்குக் கிடைத்த பரிசாகவே விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மேலும், 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை நியமிக்கப்பட்ட 12 நியமன எம்பி-க்களில் 8 பேர் பாஜகவிலேயே சேர்ந்துவிட்ட உதாரணமும் இருப்பதால், இந்த நியமனங்கள் அரசியல் பார்வையோடுதான் அணுகப்படுகிறது.

இப்படியான நோக்கத்தில் இந்த நியமனங்கள் பார்க்கப்பட்டாலும், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த ஆளுமைக்கு நியமன எம்பி பதவி போன்ற கவுரவம் கிடைப்பதாலேயே, அவரை பரிந்துரை செய்த ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவாக கிளம்பிவிடுவார்களா என்ற கேள்வியும் இங்கு எழவே செய்கிறது.

இதுதொடர்பாக மூத்த அரசியல் செய்தியாளர் எஸ்.குமரேசனிடம் பேசினோம். “தென்னிந்தியாவில்தான் பாஜகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்று அமித் ஷா பேசியதற்கும் நால்வருக்கு நியமன எம்பி பதவி கொடுத்ததற்கும் தொடர்பு இல்லையென ஒதுக்கித் தள்ள முடியாது. ஆளுமைகள், பிரபலங்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது பாஜகவின் ஓர் உத்திதான். பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி சந்திப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுந்தபோதுதான், 2019 மக்களவைத் தேர்தல் நேரத்தில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மோடி அளித்த பேட்டி வெளியானது.

நடிகர் ரஜினிக்கு எப்போதோ தாத சாகேப் பால்கே விருது கொடுத்திருக்கலாம். ஆனால், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில்தான் பாஜக அரசு அந்த விருதை அறிவித்தது. பொதுவாக தமிழகத்தில் பிரபலங்களை வைத்து செய்யப்படும் அரசியல் வென்றதில்லை. ஒரு நடிகராக சிவாஜியை ஆராதித்தவர்கள் எத்தனை பேர்? தேர்தலில் அவராலேயே வெல்ல முடியவில்லை. நடிகர் விஜயகாந்தின் நற்பணி, பாப்புலாரிட்டி எல்லாம் அவருக்கு மட்டும்தான் உதவியது. அவர் நிறுத்திய வேட்பாளர்களுக்கு உதவவில்லை. இப்போது கமல் என்ன ஆனார்? இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி கொடுத்ததை வரவேற்று அவரது வாரிசுகளே வாழ்த்துச் செய்தியை சோஷியல் மீடியாவில் வெளியிடவில்லை. இப்படி பதவி, விருது கொடுப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால், இதுபோன்ற உத்தி தங்களுக்கு வெற்றியைத் தரும் என்று பாஜக நம்புகிறது. தமிழகம், ஆந்திராவில் சினிமா பிரபலங்களின் ஆதிக்கம் இருப்பதால், அந்த ரூட்டை பாஜக தேர்வு செய்திருக்க இடமுண்டு” என்றார் குமரேசன்.

பாஜக தலைமையைப் பொறுத்தவரை 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு தயாராகிவிட்டது. இந்தியாவில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைப் பிடித்தவர்கள் எவருமில்லை. ஆளுங்கட்சிக்கு எதிராக மூன்றாவது முறை எதிர்ப்பலைகள் இயல்பாகவே தோன்றும். இந்தச் சூழலில் ஆளுமைகள், பிரபலங்களை வைத்து மேற்கொள்ளும் அரசியல் வாக்காளர்களை தங்கள் கட்சியை நோக்கி அழைத்து வரும் என்று பாஜக நினைப்பதில் வியப்பில்லை. மக்களை எளிதாக சென்றடைய மாஸ் மீடியாவும் பிரபலங்களும் ஓர் எளிதான வழி என்பதை பாஜக சரியாகவே உணர்ந்து வைத்திருக்கிறது. ஆனால், அது பாஜகவுக்கு பலன் தருமா என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in