டெல்லி வணிகர்களிடம் பாஜக பணம் பறிக்கிறது: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள வர்த்தகர்களிடம் பாஜக பணம் பறிப்பதாகவும், இந்த சாபத்திலிருந்து விடுபட அர்விந்த் கேஜ்ரிவால் உதவுவார் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் சிசோடியா, டெல்லி மாநகராட்சி தேர்தலுக்காக லக்ஷ்மி நகர், கிருஷ்ணா நகர் மற்றும் பட்பர்கஞ்ச் ஆகிய பல்வேறு வார்டுகளில் பேரணிகளை நடத்தினார். அப்போது பேசிய அவர், " டெல்லி வார்டுகளில் உள்ள தெருக்களில் தண்ணீர் தேங்கி, பல நோய்களை உண்டாக்குகிறது. ஆனால், பல ஆண்டுகளாக பாஜக இதையெல்லாம் முற்றாகப் புறக்கணித்து விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குப்பை மேலாண்மையை பாஜக ஒருபோதும் தங்கள் கடமையாகக் கருதவில்லை. பெரும்பாலான காலனிகளில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு நிரம்பி வழிந்தது.

பாஜகவினர் வியாபாரிகளிடம் பணம் பறித்து, தன்னிச்சையாக மாற்றுக் கட்டணங்களை விதித்துள்ளனர், ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக சரியான வாகன நிறுத்துமிட வசதியை அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. பல்வேறு முறையற்ற சீல் நடவடிக்கைகளை எடுத்து பல வர்த்தக நிறுவனங்களை மூட பாஜக நிர்வாகம் முயற்சித்தது. இது பல குடும்பங்களை பாதித்துள்ளது ” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வியாபாரிகள் இப்போது இதைப் பார்த்து சலிப்படைந்துள்ளனர். இதற்குக் காரணம் பாஜகவின் தவறான நிர்வாகமும், எம்சிடியில் பாஜகவின் திறமையின்மையும்தான். பாஜக என்ற இந்த சாபத்திலிருந்து விரைவில் வணிகர்கள் விடுபட கேஜ்ரிவால் உதவுவார்” என்று அவர் கூறினார்

டிசம்பர் 4-ம் தேதி டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி நடைபெறும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in